தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் இன்று ஆய்வு!...கேரளா மற்றும் கர்நாடகவில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால், வரும் நீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட காவிரியில் தற்போது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.

Sponsored


Sponsored


இதனால், காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் சமுதாயக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்ற நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 64 நிவாரண முகாம்களில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கண்காணிக்க, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்களைச் சேர்ந்த 100 வீரர்கள் மீட்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டு, கொடுமுடி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sponsored


இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 19) நேரில் பார்வையிட உள்ளார். இதற்காக இன்று காலை விமானம் மூலமாக சென்னையிலிருந்து கோவைக்குச் சென்று அங்கிருந்து ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். குறிப்பாக பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து ஈரோடு சுற்றுலா மாளிகையில் வெள்ள நிவாரணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.Trending Articles

Sponsored