கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தீவுகளான கரையோர கிராமங்கள்!சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கரையோர கிராமங்கள் தீவு போல காட்சியளிக்கின்றன.

Sponsored


கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Sponsored


இந்த நிலையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடு திட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கிறது.

Sponsored


இதையடுத்து அந்த கிராமங்களில் வசித்து வரும் 700 குடும்பங்களை சேர்ந்தவர்களை 10 பைபர் படகுகள் மூலம் நேற்று வெளியேற்றப்பட்டனர். மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது, ``கொள்ளிடம் ஆறு கரை புரண்டு ஓடுவதால் கொள்ளிடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், மற்றும் போலீஸ் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் புகுந்த கிராமங்களை சேர்ந்த 1,115 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கீழாவாடி, பாலூரான் படுகை, கொன்னகாட்டுப் படுகை, துளசேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

சம்பவ இடத்தில் சீர்காழி எம்.எல்.ஏ. பி.வி.பாரதி, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், சீர்காழி துணை கண்காணிப்பாளர் சேகர், ஒன்றிய ஆணையர் அன்பரசு ஆகியோரும் ஆய்வு செய்தனர்.Trending Articles

Sponsored