7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய வைகை அணை! - மகிழ்ச்சியில் விவசாயிகள்Sponsoredதேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக நீடித்துவரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து மூல வைகையிலும் தண்ணீர் வந்தது. இவை எல்லாம் வைகை அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்து, இன்று தனது முழுக் கொள்ளளவை எட்டியது வைகை அணை.

Sponsored


1959ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட வைகை அணை, 71 அடி உயரம் கொண்டது. இதில் 69 அடி வரை நீர் தேக்க முடியும். ஏழு வருடங்களுக்குப் பிறகு இன்று தனது முழுக்கொள்ளளவை எட்டியிருக்கிறது வைகை அணை. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முழுக்கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் இன்று மாலை சரியாக 3.30 மணிக்கு 69 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,256 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,333 கன அடியாக உள்ளது. இதனால், வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய்க்கு ஒரு போக சாகுபடிக்காகத் தண்ணீர் நாளை காலை திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Sponsored
Trending Articles

Sponsored