`மாணவர்கள் நீதி, நேர்மை தவறாதவர்களாக இருக்க வேண்டும்!’ - அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அறிவுரைSponsored``மாணவர்கள் ஒழுக்கம் உடையவர்களாகவும், நீதி நேர்மை  தவறாதவர்களாகவும் செயல்பட வேண்டும்'' என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அறிவுறுத்தினார்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி கலையரங்கில் முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எம்.முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அ.அலாவுதீன், செய்யது ஹமீதா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன்,சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

Sponsored


விழாவில் 104 பேருக்கு முதுகலைப் பட்டமும், 370 பேருக்கு இளங்கலைப் பட்டமும் வழங்கி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் பேசுகையில்,``வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், மென்பொருள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் சிலிக்கான்வேலியிலும் இந்தியர்கள்தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். பொறியியல் பட்டம்பெற்ற பட்டதாரிகள் அனைவரும் தொழில்நுட்பத்தில் புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நுட்பங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு. இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து தெரிந்து வைத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே எதிர்காலத்தைச் சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள முடியும்.

Sponsored


அப்துல்கலாம் பிறந்த ராமநாதபுரம் மண்ணில் பேசுவதற்காக பெருமைப்படுகிறேன். கலாம், சாதாரண குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்தவர். அவரது கடுமையான உழைப்பே அவர் உயர்வுக்கு வரக் காரணமாக இருந்தது. 'இன்றைய இளைஞர்கள்தான் வருங்கால இந்தியாவின் தூண்கள்' என்று கலாம் குறிப்பிடுவார். பட்டம் பெறும் ஒவ்வொருவரும் இந்த நாளில் இந்தியாவை வல்லரசாக்க பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். நேர்மையாகவும், ஒழுக்கம் உள்ளவராகவும், நீதி தவறாமலும் செயல்பட வேண்டும். முக்கியமாக மனித நேயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்'' என்றார்
விழாவில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் நெறியாளர் ஜெ.முஹம்மது ஜஹாபர், முகம்மது சதக் ஹமீது பெண்கள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாதிராபானு ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.Trending Articles

Sponsored