புகார் பெட்டி..! வாட்ஸ்அப் குழு... குற்றங்களைக் குறைக்க காஞ்சிபுரம் காவல்துறை புதிய முயற்சி!Sponsoredகுற்றங்களைக் குறைக்கவும், மக்களோடு இணக்கமான சூழலை ஏற்படுத்தவும் தமிழகக் காவல்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. மக்கள் மற்றும் காவல்துறையினரோடு நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகப் புகார் பெட்டிகள் அமைத்தல், வாட்ஸ்அப் குழு ஏற்படுத்துதல் உள்ளிட்ட கட்டமைப்பை தமிழக காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு காவல்நிலையங்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள உள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் சிவகாஞ்சி காவல்நிலையமும் கிராமப் பகுதிக்காக ஓட்டேரி காவல்நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாகக் காஞ்சிபுரம் பகுதியில் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒலிமுகமதுபேட்டையில் நடந்த இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நல்லுறவு இருந்தால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும். உங்கள் பகுதியில் ஒரு குற்றம் நடக்கும்போது நமக்கென்ன என ஒதுங்கிக்கொண்டு செல்வதால், குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். பிரச்னையை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடும். அதற்காக ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு காவலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு வாரத்தில் அந்த ஏரியாவைப் பற்றி முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும். தனது மொபைல் எண்ணை அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீட்டிலும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தகவல்களைக் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழுக்களும் அமைக்கப்பட உள்ளது. அதில் உடனடியாக தகவல்களைத் தெரிவிக்கலாம்.

அதுபோல் ஒவ்வொரு வார்டிலும் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் புகாரைப் போடலாம். முன்விரோதம் வந்துவிடும் என சில தகவல்களைக் காவல்துறையிடம் மக்கள் சொல்லத் தயங்குகிறார்கள். அப்படி அவர்கள் சொல்வதற்குத் தயக்கம் ஏற்பட்டால் இந்தப் புகார் பெட்டியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். புகாரில் உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் புகாரை யாரும் பார்க்காதபோது போட்டுவிட்டுச் செல்லலாம். அதுபோல் புகார் கொடுக்கக் காவல்நிலையம்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் காவலருக்கு தகவல் சொன்னால் அவரே உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். அந்தப் புகாரைப் பெற்று காவல்நிலையத்தில் ஒப்படைப்பார். அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால் பெரிய குற்றங்கள் நிகழாது. மேலும், உங்கள் ஆலோசனைகளையும் புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்” என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored