துபாயிலிருந்து ரூ.1,000 கோடி இறக்குமதி - இடைத்தேர்தலுக்குத் தயாரான கட்சித் தலைவர்!



Sponsored



ஆர்.கே.நகரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பரபரப்புக்குத் தயாராகி வருகிறது திருப்பரங்குன்றமும் திருவாரூரும். `தேர்தல் தேதி நெருக்கத்தில் பணத்துக்கு நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஹவாலா முறையில் 1000 கோடி ரூபாயை துபாயிலிருந்து கொண்டு வந்துவிட்டார் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

மதுரை, திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாக்கள் எல்லாம் தோற்றுப் போகும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல அதிரடிகளைக் காட்டியது. தொகுதி வாக்காளர்களை வேறு தொகுதிக்கு வரவழைத்துப் பணப்பட்டுவாடா செய்தது; தொகுதி இளைஞர்களைக் கவர ஆஃபர் கூப்பன்களைக் கொடுத்தது; குக்கர் விநியோகம் எனக் கள நிலவரம் அதிர்ச்சியடைய வைத்தது. அந்தநேரத்தில், தொகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், `பணத்தை வாரியிறைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களிடம் இருந்தோ அரசியல் கட்சித் தொண்டர்களிடம் இருந்தோ ஒரு புகார்கூட எங்களுக்கு வரவில்லை. அனைவருமே அமைதியாகிவிட்டார்கள்' என நொந்துபோய் பேசினார். நட்சத்திர வேட்பாளராக தினகரன் களமிறங்கியதும் அவருக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் வாக்கு கேட்டுச் சென்றதும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதன்பிறகு, தொகுதிக்குள் தினகரன் செல்லும்போதெல்லாம், 20 ரூபாய் நோட்டைக் காட்டி அவரை வம்புக்கு இழுப்பதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் அ.தி.மு.கவினர் சிலர். இதனால், பல நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சம்பவங்களும் நடந்தன. 

Sponsored


இந்நிலையில், `வரப்போகும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்' என அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.கவின் தினகரன் உள்ளிட்டோர் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். `இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்கும்' எனவும் கணக்குப் போடுகின்றனர். வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், தொகுதி நிலவரத்தை இப்போதே அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தயாராகி வருவதைப் பற்றி நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ``ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு 5000 ரூபாய் வரையில் கொட்டிக் கொடுத்தனர். திருப்பரங்குன்றம், திருவாரூரில் இதைவிடக் கூடுதலாகப் பணத்தைக் கொட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தநேரத்தில் பணத்துக்குச் சிரமப்படக் கூடாது என்பதற்காகக் கடந்த வாரம் துபாயிலிருந்து 1000 கோடி ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறார் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர். இது அவருடைய சொந்தப் பணம்தான். கோவையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ஒருவர்தான் இதற்கு உதவி செய்திருக்கிறார். 

Sponsored


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அவரை மட்டுமே வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்காணிக்கத் தொடங்கிவிடும். தொடர் நெருக்கடிகளும் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே பணத்தைக் கொண்டுவந்துவிட்டார். ஆனால், இந்த விவரத்தை மிக ரகசியமாக அவர் வைத்திருக்கிறார். தற்போது வரையில் அவருடைய கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்படும் செலவுகளை முன்னாள் மாண்புமிகுக்கள் சிலர்தான் செய்து வருகின்றனர். அப்படியும் செலவு செய்வதில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், `அடுத்து நம்முடைய ஆட்சிதான். அப்போது சம்பாதித்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிடுகிறார். இந்த நிமிடம் வரையில் சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் செலவு செய்து வருகின்றனர். `இப்போது பணம் இருக்கும் தகவல் தெரிந்தால், நம்மிடம் கேட்டுவிடுவார்கள்' என்பதால்தான் ரகசியம் காக்கிறார். இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துக்கும் தயாராகவே இருக்கிறார் அந்தக் கட்சித் தலைவர்" என்றார் விரிவாக. 



Trending Articles

Sponsored