மணல் திட்டுக்காக இரண்டு ஷட்டர்கள் திறக்கப்படவில்லை..! குற்றம் சாட்டும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.Sponsoredதென்மேற்குப் பருவமழை சக்கைப்போடு போட்டதன் காரணமாக, காவிரியில் 2.50 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ``காவிரியில் இருக்கும் ஒரே தடுப்பணையான மாயனூர் கதவணையில் உள்ள 67, 68 என்ற இரண்டு ஷட்டர்களைத் திறக்காமல் வைத்திருக்கிறார்கள். காரணம், அந்த இரண்டு ஷட்டர்களுக்கு நேராக காவிரியில் இருக்கும் மணல்திட்டு கரைந்துவிடும். தண்ணீர் குறைந்ததும் மணல் அள்ள முடியாது என்ற பயம்தான்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டுகிறார் கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ., பி.காமராஜ்.

இவர், 1996-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக இருந்தபோதுதான், மாயனூரில் உள்ள இந்தக் கதவணை கட்டப்பட்டது. மொத்தம் 90 ஷட்டர்களைக் கொண்ட இந்தக் கதவணையில் உள்ள 67 மற்றும் 68-வது ஷட்டர்களை அதிகாரிகள் திறக்காமல் வைத்திருக்கிறார்கள். இதை எதிர்த்துதான் பி.காமராஜ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

Sponsored


 

Sponsored


இதுபற்றி நம்மிடம் பேசிய அவர், ``மேட்டூர் முதல் பூம்புகார் வரை காவிரியில் இருக்கும் ஒரே தடுப்பணை இதுதான். இந்த அணை, என் முயற்சியால் கட்டப்பட்டது. இந்த அணையால் சுத்துப்பட்டு முப்பது கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால்தான், இந்த அணையைக் கொண்டு வந்தோம். ஆனால், காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பு வரை இந்த அணையின் கிழக்குப் பக்கம் சுத்தமாக மணலை அள்ளிவிட்டார்கள். மேற்குப் பக்கம் புதிதாக மணல் குவாரியைத் திறந்து அள்ளிவந்தார்கள். காவிரியில் இப்படி கடுமையாகத் தண்ணீர் வந்ததால், குவாரியை மூடினார்கள். ஆனால், கிழக்குப் பக்கம் கணக்கில்லாமல் மணலை அள்ளியதால், இந்தக் கதவணையின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலைக்குப்போனது. இந்த நிலையில், காவிரியில் இவ்வளவு தண்ணீர் வந்ததால், மணல் அள்ள முடியாமல் ஆளுங்கட்சியினர் தவித்துவருகின்றனர். மணல் குவாரிகளைத் தவிர்த்து, விதிமுறைகளை மீறி நினைத்த இடங்களில் பல அடி ஆழத்துக்கு லாரிகளில் மணலை அள்ளி விற்பனைசெய்துவந்தார்கள்.

இப்போது இவ்வளவு தண்ணீர் வருவதால், மணலை அள்ள முடியாமல் தவித்துவருகிறார்கள். இந்த அணையின் 67 மற்றும் 68 -வது ஷட்டர்களுக்கு நேர் கிழக்கே ஒரு மணல் திட்டு அள்ளப்படாமல் இருந்தது. அதுக்குள்ள தண்ணீர் வந்துட்டு. அதனால், அந்த இரண்டு ஷட்டர்களையும் திறந்தால், மணல் திட்டு கரைந்து சென்றுவிடும் என்ற பயத்தில் அதிகாரிகளை மிரட்டி, அந்த இரண்டு ஷட்டர்களை மட்டும் திறக்காமல் வைத்திருக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீர் வருவதால், இந்த இரு ஷட்டர்களின் தண்ணீர் மற்ற ஷட்டர்கள் வழியாக சீறிப் பாய்வதால் அணையின் கீழே மண் அரிப்பு ஏற்பட்டு, அணையின் உறுதித்தன்மை பாழாகும் சூழல் உள்ளது. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'ஆளுங்கட்சியினர் அந்த இரண்டு ஷட்டர்களையும் திறக்க வேண்டாம்'னு சொல்றாங்க. நாங்க என்ன பண்றது?'ன்னு வாய்கூசாம ஓப்பனா சொல்றாங்க. இந்தக் கதவணையின் பாதுகாப்பு கருதி உடனே அந்த இரண்டு ஷட்டர்களையும் அதிகாரிகள் திறக்கணும். இல்லைனா, திறக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்துவோம்' என்று தெரிவித்தார்.Trending Articles

Sponsored