``காவிரியில் வெள்ளம்: கடைமடைக்குத் தண்ணீர் செல்லாதது ஏன்?" - விவசாயிகள் விளக்கம்



ர்நாடகவிலிருந்து திறந்துவிடப்படும் நீரால், காவிரியில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் தமிழகத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கக் குரலாக இருக்கிறது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த விஷயத்தில் இருவேறு கருத்துகளைச் சொல்லியிருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (19-8-18) பார்வையிடச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``டெல்டா பகுதிகளுக்கு முழுவதுமாகத் தண்ணீர் கொடுத்தாலும் 25,000 கன அடி தண்ணீர்தான் கொடுக்க முடியும். அதற்கு மேல் வாய்க்கால் கொள்ளளவு கிடையாது. இப்போது 25,500 கனஅடி தண்ணீர் பிரதானக் கால்வாய் மூலமாகத் திறக்கப்பட்டு, கிளைக் கால்வாய்கள் மூலமாகவும், உப கால்வாய்கள் வழியாகவும் விவசாயத் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் கடைமடைப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். இதை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, டெல்டா பாசனப் பகுதி மக்களிடம் சென்று எந்தெந்தக் கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை என்பதை அறிந்து, கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

Sponsored


Sponsored


அதேநேரத்தில், கடைமடைப் பகுதிகளுக்கும் காவிரி தண்ணீர் தொடர்பாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கடைமடைப் பகுதிவரை முழுமையாகச் சென்றுவிட்டது'' என்றார். 

Sponsored


மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, சசிகலாவுக்கு எதிராகக் கொடிபிடித்து, பின்னர் சசிகலா குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டியதால், அவரின் தலைமையிலான ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஒட்டிக்கொண்டதன் ஓராண்டு நிறைவடையவுள்ளது. ஓ.பி.எஸ். துணை முதல்வரான போதிலும், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே இன்னமும் கருத்துவேறுபாடு நிலவுவதாகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்கள் மூலம் அறிகிறோம். அந்த வகையில், காவிரி கடைமடை விவகாரத்திலும், ஓ.பி.எஸ். ஒரு கருத்தையும், அதற்கு நேர்மாறான கருத்தை எடப்பாடியும் தெரிவித்திருப்பது, டெல்டா மாவட்ட கடைமடைப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் இந்த மாறுபட்ட கருத்தால் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையிலேயே உண்மையான வெளிப்பாடு இருப்பதில்லை. இதனாலேயே இப்படியான கருத்துகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் கடைமடைப் பகுதிகளில் தண்ணீர் வராததற்கு, அந்தப் பகுதிகளில் உள்ள சிறு நீர்நிலைகளைத் தூர் வாராததே காரணம். `குடி மராமத்து' என்ற பெயரில் தூர் வாரியதாகக் கணக்குக்காட்டி, பெருமளவு அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், அணை திறக்கப்பட்ட நாளிலிருந்து ஏழாவது நாளில் கடைமடைப் பகுதிக்கு வந்தடையும்.

ஆனால், இந்த முறை காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போதிலும், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்துசேரவில்லை. ஆனால், காவிரியில் நிரம்பி ஓடும் அதிகளவிலான தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரின்றி விவசாயமும் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்த கடைமடை விவசாயிகள், இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவும், காவிரியில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளதால், தங்களுக்குத் தண்ணீர் எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி, கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் வந்து சேராததால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வருங்காலத்தில் காவிரி டெல்டாவில் அடங்கிய கடைமடைப் பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் வானம்பார்த்த பூமியாக மாறிவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மனதில் எழுந்துள்ளது'' என்றார், மிகத் தெளிவாக. 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, ``பொதுவாக, இந்த நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள், விவசாயிகளை அடிமைகளாகவே பார்க்கிறார்கள். எட்டுவழிச் சாலைத் திட்டம் அமைப்பதற்குத் தயாராக உள்ள ஆட்சியாளர்கள், ஆறு, ஏரி, கால்வாய்களைத் தூர்வாருவதற்கு தயாராக இருப்பதில்லை. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே அதனை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால், மௌனமாக ஒதுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கடைமடை விவசாயிகளைப் பற்றி என்ன கவலை இருந்துவிடப் போகிறது. கர்நாடக மாநிலத்தில் மழை தொடங்கும் முன்னரே, காவிரி டெல்டா மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து ஆறுகள், கால்வாய்களை விரைந்து தூர் வாரியிருக்க வேண்டும். தவிர, கடந்த சில ஆண்டுகளாக,

மழைப்பொழிவு இல்லாததால், காவிரியிலும் இப்போது வந்த அளவுக்குத் தண்ணீர் வரவில்லை என்பதால், அரசு மெத்தனமாக இருந்து விட்டது.

இந்த முறை முன்கூட்டியே தூர்வாரியிருந்தால், காவிரி தண்ணீர் கடைமடைப் பகுதிகளை இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். ஆனால், தூர் வாராமலேயே தண்ணீரைத் திறந்துவிட்டால், எப்படிக் கடைமடைப் பகுதிகளைத் தண்ணீர் வந்து சேரும். மேலும், தண்ணீர்வராத காலத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆற்றில் இருந்த மணல் முழுவதுமாக, சுமார் நான்கு அடி ஆழத்துக்குத் தோண்டியெடுத்து விற்றுவிட்டனர். குடிமராமத்துப் பணிகளையும்கூட, விவசாயிகள் பொறுப்பில் விடுவதில்லை. அதையும் ஆட்சியாளர்களுக்குத் தேவையான ஒப்பந்ததாரர்களிடமே வழங்குகிறார்கள். அவர்கள், குடிமராமத்துப் பணிகளைச் செய்ததாகப் போலியாகக் கணக்குக்காட்டி, அரசிடமிருந்து பணத்தைப் பெற்றுச் சம்பாதிக்கிறார்கள். இதற்கு, அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடைந்து விட்டதாக அதிகாரிகள் பொய்யான தகவல்களைக் கொடுக்கின்றனர். அதை நம்பி அவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படி, பொய்யான தகவல் கொடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். இடையேயான பணிமோதலில் காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு, கடைமடை விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது எப்போது? 



Trending Articles

Sponsored