கல்பாக்கத்தில் 8 மாதங்களாக கதிர்வீச்சுக் கசிவா - விரிவான விளக்கம் தருமா அணுமின் நிர்வாகம்?Sponsoredல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடந்து வரும் சில சம்பவங்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஊழியர்கள். `கதிர்வீச்சு கசிவுக்கான காரணத்தை எட்டு மாதங்கள் கடந்தும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ரகசியங்களை வெளியில் சொல்கிறார்கள் என்ற சந்தேகத்தில் ஊழியர்களைப் பழிவாங்குகிறார்கள்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம். இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஒவ்வோர் அலகிலும் 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரையில், மின் உற்பத்தி நடந்து வந்தது. இந்நிலையில் அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு முதல் அணு உலை நிறுத்தப்பட்டுவிட்டது. வழக்கமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுபோல் அல்லாமல், இந்த முறை அணுக் கதிர் வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிமிடம் வரையில் கதிர்வீச்சு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்துப் பேசிய சூழல் ஆர்வலர்கள், `இந்திய அணுசக்தித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக அணுக்கதிர் வீச்சுக் கசிவுக்கான காரணம் என்ன என்றும்; எந்தப் பகுதியில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகம் திணறிவருகிறது. அணுக்கதிர் வீச்சு அபாய அளவை எட்டியும் அவசரநிலை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோல், கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும்போது அதை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியையும் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது’ எனக் கொதித்தனர். இதற்குப் பதில் அளித்த அணுசக்தி நிர்வாகமோ, 'வழக்கமான பராமரிப்புப் பணிகள்தான் நடந்து வருகின்றன. விரைவில் அணுஉலை இயங்கும்' என்றனர். 

இந்நிலையில், கதிர்வீச்சு ஏற்பட்டுள்ள இடத்தைப் புகைப்படம் எடுத்தற்காகப் பழிவாங்கப்பட்டிருக்கிறார் ஊழியர் ஒருவர். அவருடன் மற்றோர் ஊழியரும் பணியிட மாற்றத்துக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறார். "பராமரிப்புப் பணிகளுக்காக 2018 ஜனவரி 8-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்ட அணு உலையானது, ஜனவரி 22-ம் தேதி செயல்படத் தொடங்கினாலும், 30-ம் தேதி அன்று திரும்பவும் எதிர்பாராத காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. கதிர்வீச்சு கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் எங்கிருந்து, எதற்காக கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. நிர்வாகத் தரப்பில் பேசும் அதிகாரிகள், `கதிர்வீச்சு கசிவுக்கான காரணம் Q9, O9 சேனல்களை வெட்டியெடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது' எனக் கூறி வந்தாலும், மேலும் 5 சேனல்களை வெட்டி எடுக்க ஒப்பந்தப் பணிகளைக் கோரி விளம்பரப்படுத்தியதுதான் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. மேலும், வெட்டியெடுக்கப்பட்ட சேனல்களில் பாதிப்பு குறித்த அறிக்கை மும்பையிலிருந்து இன்னமும் கல்பாக்கத்துக்கு வந்து சேராத நிலையில் நிர்வாகம் சொல்வது உண்மைதானா என்னும் கேள்வி எழுகிறது" என விவரித்த சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி,  

Sponsored


``கடந்த சில நாள்களுக்கு முன்னர், சசிகுமார் என்னும் தொழில்நுட்ப ஊழியர் (T/G)  பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமித்து வைக்கப்பட்ட இடத்தில், குளிர் வெப்ப நிலையில் ஏற்பட்டிருந்த குறைபாட்டை நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். இதை நிர்வாகம் ஏற்க மறுத்ததால், அதைப் படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார். உண்மை நிலையை எடுத்துக்கூறி, `பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' எனக் கூறியதற்காக வேறு இடத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் சசிகுமார். இதுகுறித்து அணுமினின் நிலைய இயக்குநருக்குத் தகவல் அனுப்பிக் கேட்டபோது, 'அலுவலக நிர்வாகத்தில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்' எனப் பதில் அனுப்பினார். ஏழு மாதங்களுக்கு மேல் கதிர்வீச்சுக்கானக் காரணத்தைக் கண்டறிய முடியாமல் திணறி வருகிறது நிர்வாகம். இன்னும் மின் உற்பத்தியைத் தொடங்காத நிலையில், கேள்வியே கேட்கக் கூடாது என்ற மனநிலையில் அணுமின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது" என்றார் ஆதங்கத்துடன். 

Sponsored


இதுகுறித்து அணுமின் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் சார்பாக நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ``அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, `நிர்வாகரீதியாக அவ்வப்போது சிலர் மாற்றப்படுவது இயல்பான ஒன்று. இதைச் சிலர் தேவையில்லாமல் சர்ச்சை ஆக்குகின்றனர். பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு மேல் எதுவும் பேச முடியாது' என்றனர். `கதிர்வீச்சு கசிவா... ஊழியர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கையா என எந்தக் கேள்விகளுக்கும் அணுமின் நிலைய நிர்வாகத்திடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை. அணுமின் நிர்வாகத் தரப்பிடமிருந்து விளக்கம் அளிக்க முன்வந்தால், பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!.Trending Articles

Sponsored