`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா?'  - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள் Sponsoredருணாநிதி சமாதியை நோக்கி, அமைதிப் பேரணியை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் மு.க.அழகிரி. `ஸ்டாலினுக்கு எதிராக மெரினாவில் கோபத்தைக் காட்டியதற்குப் பிறகு, அழகிரியிடம் குடும்ப உறுப்பினர்கள் யாரும் முகம்கொடுத்துப் பேசுவதில்லை' என்கின்றனர் கோபாலபுரம் வட்டாரத்தில். 

சென்னை மெரினாவில் அமைந்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் சமாதிக்குக் கடந்த 13-ம் தேதி வந்த அழகிரி, 'கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். என்னுடைய ஆதங்கத்தைச் சொல்வதற்காக இங்கு வந்தேன்' எனக் கொளுத்திவிட்டுப் போனார். மறுநாள் (14.8.2018) தி.மு.க செயற்குழு நடக்க இருந்த நிலையில், அழகிரியின் இரண்டு வரிப் பேட்டியை உன்னிப்பாகக் கவனித்தனர் அரசியல் வட்டாரத்தில். ஆனால், இதற்குக் கடிதம் வழியாக எதிர்வினையாற்றிய செயல் தலைவர் ஸ்டாலின், 'நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்துக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகள் அனைத்தும் அழகிரியை மையப்படுத்தியே சொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 'மீண்டும் தி.மு.க-வுக்குள் கோலோச்சலாம்' எனக் குடும்ப உறுப்பினர்கள் மூலம் காய்களை நகர்த்திய அழகிரிக்கு, ஸ்டாலின் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இந்தக் கோபத்தைத்தான் மெரினாவில் வெளிப்படுத்தியிருந்தார் அழகிரி. 

இதன் பின்னர் ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசித்த அழகிரி, `தலைவர் இறந்த 30-வது நாள் அன்று சமாதியை நோக்கி அமைதிப் பேரணியை நடத்துவோம். தலைவரின் உண்மை விசுவாசிகளை அணி திரட்டுங்கள்' எனக் கூறிவிட்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் ஆதரவாளர் ஒருவர், "புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி சமாதி வரையில் அமைதிப் பேரணி நடத்த இருக்கிறோம். வரும் 5-ம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணி வரையில் பேரணி நடக்க இருக்கிறது. தொடக்கத்தில் 25,000 பேரைத் திரட்டுவது நோக்கமாக இருந்தது. தற்போது 50,000 பேர் வரையில் திரட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறோம். இதற்கான ஆயத்தப் பணிகளில் அழகிரியே நேரடியாக ஈடுபட்டுவருகிறார். பேரணி முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பார்" என்றார் விரிவாக. 

Sponsored


அதேநேரம், அழகிரி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள். "காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலேயே, 'அழகிரியைக் கட்சிக்குள் சேர்க்க வேண்டும்' என செல்வி, முரசொலி செல்வம், தமிழரசு உள்ளிட்டோர் பேசி வந்தனர். இவர்களின் கோரிக்கைக்கு ஸ்டாலின் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில், 'அழகிரிக்கு அனுமதியில்லை' என ஸ்டாலின் தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். இதை ஏற்க முடியாமல்தான் சமாதிக்குப் போனார் அழகிரி. இந்த நடவடிக்கையை முரசொலி செல்வம் எதிர்பார்க்கவில்லை. உடனே, கோபம் தாங்க முடியாமல், 'தலைவர் இறந்த பிறகு என்ன மாதிரியான சூழலில் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா' எனக் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். குடும்ப உறுப்பினர்களிலேயே செல்வம் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார் அழகிரி. அவரிடமிருந்து இப்படி கோபமான வார்த்தைகள் வரும் என அவர் எதிர்பார்க்கவில்லை. மெரினா சம்பவத்துக்குப் பிறகு அழகிரியிடம், குடும்ப உறுப்பினர்கள் பலரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை" என்கிறார் குடும்ப உறுப்பினர் ஒருவர்.

Sponsored
Trending Articles

Sponsored