மாணவர்கள் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்தத் தடை... பின்னணி என்ன?Sponsored(படத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மாடல்களே..)

`கல்லூரிகளில் மாணவர்கள் இனி செல்போன் பயன்படுத்தத் தடை' என்று உயர் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் ஆகிய கல்லூரிகளுக்கு இந்தத் தடை உத்தரவு குறித்த சுற்றறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பதும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவிகள் செல்போனைப் உபயோகிப்பது குறித்தும் அதிக புகார்கள் எழுந்ததையொட்டி, இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து சிலரிடம் கேட்டேன். 

வீ.மாரியப்பன், மாணவர் சங்க மாநிலத் தலைவர் (SFI)

Sponsored


Sponsored


``உயர் கல்விக்கான பாடத்திட்டங்கள், பல கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படவில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. சமீபத்தில்கூட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வின்போது, மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டுமென வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள் (Teacher training institute) மொத்தம் 32 இருந்தன. அவற்றில் 20 பயிற்சி மையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களோ  256 இடங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை அனைத்திலும் தற்போது அட்மிஷன் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் ஆசிரியர் பயிற்சி அளிக்கும் மையங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுவிடும். 

இதுபோன்று எத்தனையோ சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டிய அவசியம், அவசரம் ஏன் வந்தது? 'மாணவர்கள் தவறு செய்கிறார்கள்; அதனால், தடை செய்கிறோம்' என்று சொல்வீர்களானால் உங்களிடம் ஒரு கேள்வி. மாணவர்களிடம் செல்போன் இருந்தாலும், அவர்கள் தவறு செய்யாமல் சிந்தனை ரீதியாக அவர்களை நல்வழிப்படுத்துவதுதானே கல்விக் கூடங்களின் பணி. அந்தப் பொறுப்பிலிருந்து கல்விக்கூடங்களே நழுவினால் மாணவர்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஒருசிலர் தவறு செய்கிறார்கள் என்று கருதி, 'செல்போனே பயன்படுத்தக் கூடாது' என மாணவர்களை ஒடுக்குவது எந்தவகையில் நியாயம்? அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, மாணவர்களின் நலனுக்கானதாகத் தெரியவில்லை; கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்களை, பேரங்களை, ஒருசில ஆசிரியர்களின் பாலியல் துன்புறுத்தல்களை மாணவர்கள் செல்போனில் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, செல்போன் பயன்படுத்தத் தடை என்ற உத்தரவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்."

அரி பரந்தாமன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி 

"இது ரொம்ப தவறான உத்தரவுங்க. இப்படியோர் உத்தரவைக் கொண்டுவர்றதுக்கு முன்னாடி மாணவர்கள்கிட்ட கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்றதுக்கு வடிகாலா இருந்த மாணவர் சங்கங்களைக் கல்லூரிகள்ல ஏற்கெனவே தடை செய்துட்டாங்க. அப்போவே கல்லூரிகள்ல இருந்த ஜனநாயகம் செத்துப்போச்சு. அரசியலைமைப்புச் சட்டம் 19(1) பிரிவு c-ன்படி, சங்கம் வைக்க நாட்டிலுள்ள எந்தக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. ஆசிரியர் சங்கம் இருக்கிறபோது, மாணவர்கள் சங்கம் இருக்கக் கூடாதா? அப்படி மாணவர்கள் சங்கம் அனுமதிக்கப்பட்டால் கல்வி வியாபாரிகளுக்கு எதிராக, அவர்கள் ஒன்று திரண்டுவிடுவாங்கன்னு அதற்கு அனுமதிக்கிறதில்ல. இதனாலத்தான் ஒருதலைப் பட்சமாகவே முடிவுகள் எடுக்கப்படுது. செல்போன் தடை விவகாரத்திலும் அதுதான் நடந்து இருக்கு. முதலில் கல்லூரிகளில் மாணவர்கள் சங்கம் அமைக்கப்பட வேண்டும். அதுதான் அடிப்படைத் தீர்வு." 

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

``தகவல் தொடர்பு சாதனம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில் மாணவர்களின் வீட்டுக்கும், கல்லூரிக்குமான தொலைவு பெரும்பாலும் அதிகமாகவே உள்ளன. மேலும், பல மாணவர்கள் வெளியூர்களிலிருந்து வந்து விடுதிகளில் தங்கியோ அல்லது தனியார் கட்டங்களில் வாடகைக்குத் தங்கியோ கல்வி பயிலும் நிலை உள்ளது. அதுபோன்ற மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க, செல்போன் என்பது அவசியமாகிறது. குறிப்பாக, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொள்ள செல்போன் மிகமிக அவசியம். தங்கள் பிள்ளைகளுடன் பெற்றோர் பேசுவதற்கும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்ப்பதற்கும் செல்போன் பயன்பாடு கட்டாயம் தேவை. ஒருசில மாணவ, மாணவிகள் செல்போனை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அதுபோன்றவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் செல்போனை கல்விக்காக ஆக்கபூர்வமான வகையில் எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கல்லூரி நிர்வாகம், அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்வதற்கு முன் கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கல்லூரி நிர்வாகிகள் உட்கார்ந்து ஆலோசித்து ஆரோக்கியமான தீர்வுகளை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக செல்போன் பயன்படுத்தத் தடை என்று அறிவித்திருப்பது, அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரிகளில் நடக்கும் சில சம்பவங்களை மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடக் கூடாது என்பதால்கூட இந்தத் தடை உத்தரவை வெளியிட்டிருக்கலாம். இதனால், மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எனவே, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்."

சசிகலா, ஆசிரியை

"எல்லா மாணவர்களும் செல்போனைத் தவறாகப் பயன்படுத்துறாங்கன்னு சொல்ல வரல. ஆனா, குறைந்த சதவிகிதத்திலான மாணவர்கள் தங்களிடம் உள்ள செல்போனை தவறாகப் பயன்படுத்துறாங்க. அவங்கள மனசுல வெச்சு இந்த முடிவை அறிவிச்சு இருக்கலாம். கல்லூரிப் படிப்புதான் மாணவர்களோட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. செல்போன் பயன்பாடு இல்லாதபட்சத்தில் அவர்களிடம் கவனச்சிதறல் இருக்காது. தன் பிள்ளை நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு பெத்தவங்க எப்படியெல்லாமோ கடனை வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாங்க. அவங்க கனவுகளை செல்போன்ங்கிற கருவி சிதைச்சுடக் கூடாது இல்லையா! அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான், இந்தத் தடை உத்தரவு கொண்டு வரப்பட்டிருக்கிறதே தவிர, மாணவர்களை ஒடுக்கும் நோக்கத்தில் அல்ல. இதை எல்லோரும் புரிஞ்சிக்கணும்".Trending Articles

Sponsored