கரூர் காகித ஆலையில் ரசாயன வாயு தாக்கி தொழிலாளி பலி - உறவினர்கள் போராட்டம்!Sponsored 

கரூரை அடுத்த புகழுரில் செயல்படும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர் ரசாயன வாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'அடிக்கடி இங்கே இப்படி விபத்து ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துட்டாங்க. அவங்களுக்கு உரிய நிவாரணமோ, வாரிசு அடிப்படையில் வேலையோ தராமல் நிர்வாகம் வஞ்சனை செய்யுது' என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

புகழூரில் இயங்கி வரும் இந்தக் காகித ஆலை எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தவர் கண்ணதாசன். கடந்த 12-ம் தேதி ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பைப்பை சுத்தம் செய்துள்ளார். அப்போது ரசாயன திரவ வாயு தாக்கி ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.  'உரிய நிவாரணம் மற்றும் வாரிசுக்கு வேலை தருகிறோம்' என்று ஆலைத் தரப்பில் தரப்பட்ட உத்தரவாதத்தைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கண்ணதாசன் உடலை உறவினர் வாங்கிச் சென்றனர்.
 

Sponsored


 

Sponsored


இந்த நிலையில், நம்மிடம் பேசிய காகித ஆலைத் தொழிலாளர்கள் சிலர், ``இதுபோல் அடிக்கடி இங்கே விபத்து ஏற்பட்டு அப்பாவி தொழிலாளர்கள் உயிர்கள் அநியாயமா போவுது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்படி பாய்லர் வெடித்தும், ரசாயன வாயு தாக்கியும், வேறு வகையிலும் இறந்துபோயிருக்காங்க. ஆனால், ஆலைநிர்வாகம் எங்களுக்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில்லை. அதேபோல், இறந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டையும், வாரிசு அடிப்படையில் வேலையையும் தருவதில்லை. யாராச்சும் தொழிலாளிகள் இப்படி இறக்கும்போது பிரச்னையை சுமூகமாக்க, 'உங்களுக்கு உரிய இழப்பீட்டையும், வாரிசு அடிப்படையில் வேலையையும் வழங்குகிறோம்'ன்னு சொல்வாங்க. ஆனா, சொன்னபடி செய்கிறதில்லை. அநியாயமாகத் தொழிலாளர்கள் உயிர்கள் போவதுதான் கொடுமை" என்றார்கள்.

Sponsored