``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..!’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்Sponsoredகடவுளின் பெயரைக்கொண்ட போலீஸ் ஐ.ஜி, பெண் எஸ்.பி-க்கு செல்போனில் அனுப்பிய மெசேஜ்களைப் பார்த்து அரசு உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் கடவுளின் பெயரைக் கொண்ட ஐ.ஜி மீது பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரிக்க உள்ளது. அதில் பல உண்மைகள் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Sponsored


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக காவல்துறையில் சிறப்பு பிரிவில்தான் கடவுளின் பெயரைக் கொண்ட ஐஜி-யும் புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யும் பணியாற்றுகின்றனர். ஐஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த புகாருக்கு ஆதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை விசாகா கமிட்டி ஆய்வு செய்யும். அதோடு ஐஜியிடமும் பெண் எஸ்.பி-யிடமும் விசாரித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார். 

Sponsored


பெண் எஸ்.பி-யுடன் பணியாற்றுபவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், ``சில மாதங்களுக்கு முன், டி.ஜி.பி அலுவலகத்துக்குச் சென்று ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்தார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஐ.ஜி, அதன் பிறகு அதிகளவில் பெண் எஸ்.பி-க்கு டார்ச்சர் கொடுக்கத் தொடங்கினார். இதனால் தினமும் மன உளைச்சலுடனே பெண் எஸ்.பி பணிக்குச் சென்றுவந்தார். அடிக்கடி இன்டர்காமில் பெண் எஸ்.பி-யை அழைக்கும் ஐ.ஜி, வழக்குகளுக்குச் சம்பந்தமில்லாதவற்றைப் பேசியிருக்கிறார். உயரதிகாரி என்பதால் பெண் எஸ்.பி-யும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், ஐ.ஜி-யின் ஒவ்வொரு செயலாலும் பெண் எஸ்.பி பாதிக்கப்பட்டார். அதோடு பெண் எஸ்.பி-யின் செல்போனுக்குத் தினமும் காலை குட்மார்னிங் என்ற மெசேஜ், இரவில் குட் நைட் என அனுப்பியுள்ளார். தொடர்ந்து வந்த மெசேஜ், பெண் எஸ்.பி-யை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் பெரும்பாலானவை இரட்டை அர்த்தம் கொண்டவை.

அடுத்து, ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்டன. இதனால் பெண் எஸ்.பி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். ஒருகட்டத்தில் ஐ.ஜி-யிடமே அதைத் தட்டிக்கேட்டபோது பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உன்னுடைய ரெக்கார்டில் கை வைத்துவிடுவேன் என்று ஐ.ஜி மிரட்டியுள்ளார். இதனால் பெண் எஸ்.பி எதுவும் பேச முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துவந்தார். மெசேஜ், வீடியோக்களோடு எல்லை மீறத் தொடங்கினார் ஐ.ஜி. தனியாக இருந்த சமயத்தில் தொட்டுப் பேசுவது, சைகை செய்வது என டார்ச்சர் அதிகமானது. குடும்பம் உள்ளிட்ட சில காரணங்களுக்காகப் பொறுமையாக இருந்தார் பெண் எஸ்.பி. டார்ச்சர் அதிகமானதும், நேரில் ஐ.ஜி-யைச் சந்தித்துள்ளார் பெண் எஸ்.பி. அப்போது, நீங்கள் நினைக்கிற மாதிரியான பெண் நான் இல்லை. எனக்கு குடும்பம் இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதற்கு ஐ.ஜி, உன்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும், நடிக்காதே. நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ செல்லம் என்று ஐஜி ரொமான்ஸாக பேசியிருக்கிறார். இதைக்கேட்டு பெண் எஸ்.பி அதிர்ச்சியடைந்துள்ளார். 

இந்தச் சூழ்நிலையில்தான் சில நாள்களுக்கு முன்பு ஐ.ஜி-யிடமிருந்து பெண் எஸ்.பி-க்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்றபோது ஐ.ஜி, அநாகரிகமாக நடந்துள்ளார். இதனால் அழுதுகொண்டே பெண் எஸ்.பி வெளியில் வந்துள்ளார். அதன் பிறகு, மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் போலீஸ் உயரதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை. இதனால் தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் பெண் எஸ்.பி ஆலோசித்துவிட்டு, மாநில உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க முடிவு எடுத்தார். அதன்படி அவர்களைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் பெற்றார். அப்போது, ஐ.ஜி-யால் எப்படியெல்லாம் டார்ச்சர் ஏற்பட்டது என்பதை கண்ணீர்மல்க அரசு உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆதாரமாகச் செல்போனிலிருந்த மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் பாலியல் புகாரை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை என்று டி.ஜி.பி அலுவலக அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது விசாகா கமிட்டியில் உறுப்பினர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகப் பதிலளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விசாகா கமிட்டிக்கு புதியவர்கள் நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றனர். 

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யிடம் பேச முயற்சி செய்தோம். இப்போதைய சூழ்நிலையில் பேச விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவர் மூலம் நமக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கடவுளின் பெயரைக் கொண்ட ஐ.ஜி-யிடம் பேச முயன்றோம். அவரும் பதிலளிக்கவில்லை. இருவரின் விளக்கங்களைப் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.Trending Articles

Sponsored