``நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை!’’ கொள்ளிடக் கரையோர மக்கள் வேதனைSponsoredமிழகத்திலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண உதவிகள் குவிந்துவருகின்றன. அதேநேரத்தில், கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அந்தக் கிராமங்களில் உள்ள மக்கள், தங்களுடைய உடைமைகள் மற்றும் விவசாய விளைநிலங்களை இழந்துள்ளனர். இது தவிர, அவர்களுக்கு எந்த விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்கின்றனர் அந்தக் கிராம மக்கள்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பழைய கொள்ளிடம் கரையோரம் உள்ள அக்கரைஜெயங்கொண்டபட்டினம், வேளக்குடி, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், மேலக்குண்டலப்பாடி, அகரநல்லூர், மடத்தான்பட்டு, பழையநல்லூர், எருக்கண்காட்டுபடுகை உட்பட 30 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து தீவுகள்போல் காட்சியளிக்கிறது.

Sponsored


இந்தக் கிராமங்களில் இடுப்பளவு தண்ணீர் உள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் சில கிராம மக்கள் அவர்கள் வளர்த்துவரும் கால்நடைகளை விட்டுவிட்டு வர முடியாது எனக் கூறி கால்நடைகளைக் கிராமத்தில் உள்ள மேடான பகுதிகளில் கட்டிவைத்து, அவர்களும் பாதுகாப்பாய் அருகில் உள்ள மாடி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

Sponsored


அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவுப் பொருள்களைப் படகு மூலம் கொண்டுபோய் வழங்கிவருகின்றன. அதேநேரத்தில், இவர்களுடைய வீடுகள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியதாலும் இடிந்து விழுந்ததாலும் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் சென்றுவிட்டன. இதனால், அவர்கள் மாற்றுத் துணி இல்லாமலும், போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்களின் வாழ்வாதாரமான விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மரவள்ளிக் கிழங்கு, முருங்கை மற்றும் பூச்செடிகள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளது.

வெள்ளம் பாதித்தது தொடர்பாக அக்கிராம மக்களிடம் பேசினோம்.

அக்கரைஜெயங்கொண்டபட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், ``நாங்க கடந்த 5 நாளா வெள்ளத்தால பாதிக்கப்பட்டிருக்கோம். ஏதோ அப்பப்ப சாப்பாடு மட்டும்தான் கொடுக்குறாங்க. அதிகாரிங்க யாரும் இதுவரை எங்க ஊரை வந்து பார்க்கலை. திடீரென வெள்ளம் வந்ததால் வீட்டுல இருந்து பொருள்கள எடுக்க முடியலை. மாற்றுத் துணி இல்லாமலும், போர்வை, பாய் இல்லாமலும் குழந்தைகளை வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்படுறோம். எங்க விவசாய நிலத்துல தண்ணி புகுந்து பயிர்கள் எல்லாம் நாசமாயிடுச்சு. ஒரே நாளில் அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்துட்டோம். கடுமையான வெள்ளத்தால பாதிக்கப்பட்ட கேரளாவுக்குத் தமிழகத்துல இருந்து நிவாரண பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. அவுங்களுக்கு இந்த நேரத்துல செய்யுறதுல எந்தத் தப்பும் இல்லை. அதேநேரத்துல, இங்கு ஏற்பட்ட வெள்ளத்துல அனைத்தையும் இழந்து நிற்கும் எங்களுக்கும் அரசாங்கமும் பிற மக்களும் உதவி செய்யணும். இதுவரைக்கும் எங்களுக்கு எந்த நிவாரணப் பொருள்களும்  கிடைக்கலை'' என்றார் கண்ணீருடன்.

மடத்தான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இந்துராணி, ``இங்க ஏற்பட்ட வெள்ளத்தால எங்களோட வீடும் நிலமும் தண்ணீரில் மூழ்கியிருக்கு. எங்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வரலை. தமிழகத்துக்குத் தண்ணீரே தரமாட்டேன் என்று சொன்னவங்க, இன்று தண்ணீரை அதிகமாகத் தொறந்துவிட்டு தமிழகத்தையும் வெள்ளக்காடாக மாத்திட்டாங்க. அதனால, இன்னிக்கி நாங்களும் கஷ்டப்படுறோம். உணவுப்பொருளைத் தவிர வேறு எந்த அத்தியாவசியப் பொருளும் எங்களுக்குக் கிடைக்கலை. கேரளாவுக்கு உதவுவதைப்போன்று எங்களுக்கு உதவணும்'' என்றார் அழுதபடியே.

`எங்களுக்கும் உதவுங்கள்' என்பதுதான் கொள்ளிடக் கரையோர மக்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.Trending Articles

Sponsored