நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த அந்தமான் ஜிம் ட்ரெய்னர்!



Sponsored



நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் அந்தமான், நிக்கோபார் தீவைச் சேர்ந்த ஜிம் ட்ரெய்னர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் வீடு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது. கமலின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டுவருகிறது. இதனால், அங்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் காவலாளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை 8 மணியளவில் டிப்டாப் மனிதர் ஒருவர் அங்கு வந்தார். மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால், காம்பவுண்ட் சுவரின் மீது ஏறிய அந்த மனிதர், உள்ளே குதித்தார். இதைப் பார்த்த காவலாளிகள், அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், பிடிபட்டவரிடம் விசாரித்தார். அப்போதுதான் அவரின் சுயரூபம் தெரியவந்தது. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கமல்ஹாசனின் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த நபரின் பெயர் மலைச்சாமி. இவர், அந்தமான், நிக்கோபார் தீவில் குடியிருந்துவருகிறார். இவரின் அப்பா, அரசு துறையில் பணியாற்றியவர். அவர் இறந்துவிட்டார். மலைச்சாமி, ஜிம் ட்ரெயினராக இருந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதில் கடும் மனஅழுத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்களுக்கு சென்னை புரசைவாக்கத்தில் வீடு உள்ளது. சிகிச்சைக்காக மலைச்சாமியும் அவரின் அம்மாவும் விமானத்தில் சென்னை வந்துள்ளனர். புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மலைச்சாமி இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிய அவர், ஆழ்வார்பேட்டைக்கு வந்துள்ளார். மலைச்சாமியின் மருத்துவ ரிப்போர்ட்களைப் பார்த்த நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம்" என்றனர். 

Sponsored


போலீஸ் உயரதிகாரி ஒருவர் மலைச்சாமியிடம் விசாரித்தபோது நீங்கள் நுழைந்த வீடு யாருடையது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தெரியாது என்று கூறியுள்ளார். அது கமல் வீடு, அங்கு நீங்கள் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். அதை அமைதியாகக் கேட்ட மலைச்சாமி, திடீரென நான் அப்படித்தான் செய்வேன் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால் மலைச்சாமியை அழைத்துக்கொண்டு அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மலைச்சாமியின் அம்மா, கண்ணீர்மல்க போலீஸாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலின் கட்சி அலுவலகத்துக்குள் கடலூரைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் நுழைந்தார். அவரிடம் விசாரித்தபோது திருடுவதற்காக சென்றதாகக்கூறினார். தற்போது மலைச்சாமி நுழைந்துள்ளார். அடுத்தடுத்து கமலின் கட்சி அலுவலகத்துக்குள் மர்ம மனிதர்கள் நுழையும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Trending Articles

Sponsored