``குரங்கைத் தொந்தரவு செய்யாமல் பிடியுங்கள்!" - கையில் கயிற்றுடன் வனத்துறை



Sponsored



.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் வசிப்பிடம் என்றாலே தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் காவல் உள்ளிட்ட பிற பாதுகாப்புத் துறையினருக்கு வந்துவிடுவது இயல்புதான். சென்னை நெற்குன்றம் பகுதியில், 760 வீடுகளைக் கொண்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வனத்துறை அதிகாரிகள் மூவர் தலைமையில், 15 பேர், அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தைக் கண்காணித்து வருகின்றனர். ஆளுக்கு ஒரு கயிற்றுடன் இரவு பகல் பாராமல் இந்தக் குடியிருப்புகளைச் சுற்றி வந்தபடியே உள்ளனர்.

இந்த கண்காணிப்புக்குக் காரணம்... தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையோ வெள்ளத் தடுப்புக்கான முன் முயற்சியோ அல்ல. எங்கிருந்தோ வந்த இரண்டு குரங்குகள், அந்தக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதே இதற்குக் காரணம். 'அடுக்குமாடிக் குடியிருப்பு 'ஏ' பிளாக்கின் 9-வது மாடியில் நுழைந்துவிட்டக் குரங்குகளைப் பிடித்துக்கொண்டுபோய் வனப்பகுதியில் விடுங்கள்... வீட்டில் இருக்கும் முதியவர்களும் பிள்ளைகளும் இந்தக் குரங்குகளால் வெளியில் வரவே பயப்படுகிறார்கள்' என்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அசோசியேஷனிலிருந்து பத்து நாள்களுக்கு முன்னர், வனத் துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், குடியிருப்பினுள் இரண்டு குரங்குகள் நுழைந்துவிட்டதை உறுதி செய்துகொண்டனர். பின்னர் குரங்குகளைப் பிடிக்க பிரத்தியேகமாகக் கொண்டுவரப்பட்ட வலை, சுள்ளி போன்ற நீளமான பிரம்புகள் மற்றும் கயிறு உருண்டைகளின் உதவியுடன் களத்தில் இறங்கிவிட்டனர். அடுத்தடுத்து விடாமல் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, 'பி' பிளாக் பகுதியில் பதுங்கிக் கொண்டிருந்த ஒரு குரங்கு, வலையில் சிக்கிக்கொண்டது. மற்றொரு குரங்கு பிடிபடாமல் தப்பித்துவிட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதும் வலை வீசியும் அந்தக் குரங்கு சிக்காததால், 'ஒரு குரங்கு தப்பித்துவிட்டது; ஒரு குரங்கு சிக்கிவிட்டது' என்று வனத்துறையினர், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தவர்கள், குடியிருப்பு வாசிகளிடம், ''மறுபடியும் குரங்குகளின் வாலாட்டம் இருப்பதாகத் தகவல் இருந்தால் உடனே சொல்லி அனுப்புங்கள்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டனர்.

Sponsored


இந்நிலையில், இன்று காலை 'டி' பிளாக்கில் ஒரு குரங்கு சுற்றித் திரிவதாகக் குடியிருப்புச் சங்கத்திலிருந்து மீண்டும் வனத்துறையினருக்குப் புகார் போய் இருக்கிறது. இந்தப் புகாரையடுத்து மீண்டும் வனத்துறையினர் ஸ்பெஷல் டீம், ஸ்பெஷல் கருவிகளுடன் நெற்குன்றம் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகள் உள்ள குடியிருப்புக்கு வந்துள்ளனர். "குரங்குகளை இந்தத் தடவையாவது மிஸ் பண்ணாமல் பிடித்துக்கொண்டு போய் வனப்பகுதிக்குள் விட்டுவிடுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு பக்கம், "குரங்குகளை அச்சுறுத்தாமல், அவற்றுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இலகுவான முறையில் பிடித்துக்கொண்டு போக முயலுங்கள். நாங்கள், குரங்குகளைக் கடவுளின் அம்சமாகப் பார்க்கிறோம்" என்று குடியிருப்பில் வசிக்கும் வட இந்திய அதிகாரிகளின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனராம். ஆக, குரங்குகளுக்குத் தொல்லை கொடுக்காமல் பிடித்துக்கொண்டு போகும் முயற்சியில் வனத்துறையினர் அதேபகுதியில் முகாமிட்டுள்ளனர். வனத்துறையினர், கையில் கருவிகளுடன் சுற்றுவதால், பொதுமக்கள் அவர்களை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்!

Sponsored


மனிதர்கள் வாழும் இடங்களில் வன உயிரினங்கள் வாழ்தல் என்பது சிக்கலான விஷயம்தான். குடியிருப்பில் நுழைந்தது குரங்கு என்றதால் பரவாயில்லை... சில மாதங்களுக்கு முன், மனித -வன உயிரின மோதல் தடுப்பு குறித்து வால்பாறை அடுத்த அட்டகட்டி வனத்துறைப் பயிற்சி மையத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர், ஆனைமலை புலிகள் காப்பகத் தலைமை வனப்பாதுகாவலர், வால்பாறை போலீஸ் டி.எஸ்.பி மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். வனத்துறை அதிகாரிகள் பேசும்போது, 'வால்பாறை மலைப்பகுதியில் வனவிலங்கு - மனித மோதல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க,  சிறுத்தைகளுக்குப் பிடித்தமான வளர்ப்புப் பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். யானைக்கு மிகவும் பிடித்தமான வாழையைக் குடியிருப்புப் பகுதியில் பயிரிடுவதையும் தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதையும் பொதுமக்கள் கைவிட வேண்டும். குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள புதர்ப்பகுதிகளை எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற முன்வர வேண்டும். சிறுத்தை நடமாட்டம் மாலை வேளையில்தான் அதிகம் இருக்கும் என்பதால், மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியே விடக் கூடாது. வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் இருசக்கர வாகனத்தில், இரவு நேரத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்பது போன்ற அறிவுரைகள், அங்கே ஆலோசனையாக வழங்கப்பட்டது.



Trending Articles

Sponsored