"மெட்ராஸ்காரங்க சார்... ஆனா, மெட்ராஸ்ல இல்ல சார்!" நம்பினோர் கைவிடப்படும் கதை #MadrasDaySponsoredமதுரை, மாமல்லபுரம் போன்று ஒரு புராதன நகரம் அல்ல சென்னை. அது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நகரம். கடற்கரையையொட்டி இருக்கும் இந்நகரம் வியாபாரப் பரிமாற்றங்களுக்கு ஏதுவாக இருக்குமென்று இங்குப் பல கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டன. பல கட்டடங்கள் கட்டப்பட்டன. அந்தக் கிராமங்களையும், கட்டடங்களையும் உருவாக்குவதற்கு இங்கு ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த மக்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. அத்துடன், தமிழகத்தின் கிராமங்களில் பண்ணையடிமைகளாக இருந்த மக்கள் சொற்ப கூலிக்காக தங்களது உடமைகளையும், உறவினர்களையும் இழந்து, இந்நகரத்தின் உருவாக்கத்துக்கு மக்கள் கூட்டிக்கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் கூவம் நதியோரத்திலேயே வாழுகின்ற சூழல் நேர்ந்தது. அங்கேயே குடிசை வேய்ந்து வாழ்ந்தபடியே இங்குள்ள துறைமுகம், அரசு கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், ட்ராம் வேஸ், ஆலைகள், அச்சுக்கூடங்கள், கோயில்கள் ஆகியவற்றைக் கட்டி இதை ஒரு நகரமாக எழுப்பினார்கள். மட்டுமன்றி, பிரிட்டிஷார்க்குத் தேவையான நெசவுத் துணிகள் நெய்து ஏற்றுமதி செய்து மற்ற மாகாணங்களோடு ஒப்பிடுகையில் வர்த்தகத்திலும் சென்னையை ஒரு நகரமாக வடிவமைத்ததில் அடித்தட்டு மக்களின் பங்கு அளப்பரியது. அவர்கள்தாம் சென்னை என்னும் கவர்ச்சியான நகரத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள். 

இந்த இரண்டுதரப்பு மக்கள் இல்லை என்றால் இன்று சென்னை இல்லை. காரணம், அந்த வேலைகளைச் செய்வதற்கு முன்வந்தவர்கள் அவர்கள்தாம். இங்கு நிகழ்த்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியால் அவர்கள்தாம் இவற்றைச் செய்ய வேண்டுமென அவர்களுக்கு இச்சமூகம் உணர்த்தியது. மக்களின் கடின உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக எழும்பியது சென்னை எனும் இந்நகரம். ஆங்காங்கே அவர்கள் வாழ்கின்ற பகுதியே அவர்கள் செய்கின்ற தொழிலை முன்னிட்டு ஊர்களாகவும், பேட்டைகளாகவும் மாறின. இந்நகரம் வர்த்தரீதியாக மேன்மேலும்  கவனம் பெற ஆரம்பித்தது. இந்த நகர உருவாக்கத்தில் பெரும்பங்கு ஆற்றிய மக்களுக்குக் கல்வி வாய்ப்பு எளிதில் கிடைக்காததால் அவர்கள் கூலி வேலைகளையே தொடர்ந்தார்கள். 

Sponsored


சென்னைக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என நாளடைவில் பல ஊர்கள், பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் வேற்று மக்கள் இங்குக் குடியமர வந்தார்கள். தமிழகத்தின், இந்தியாவின் கதம்பமாக சென்னை மாறியது. இது இன்னும் பெருநகரமாக உருவெடுக்கத் தொடங்கியது. தற்போது உலகப் பெருநகரங்களின் வரிசையில் ஜொலிக்கின்றது. 

Sponsored


இன்னொருபுறம், இந்நகரத்தை உருவாக்கிய அடித்தட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கூவம் ஓரம் இருக்கும் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பல இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு கூவம் ஓரத்தில் அவர்கள் குடும்பம் நடத்துவதற்குக் காரணம், பெருகிவரும் விலைவாசிகளோடும், கல்விச் செலவுகளோடும், வீட்டு வாடகைகளோடும் அவர்களால் ஈடு கொடுக்க முடியாததே ஆகும். ஆகவே, கிடைக்கிற இடங்களில் ஆற்றின் ஓரமாக குடிசை அமைத்து இருக்கிறார்கள். அல்லது ஏற்கெனவே தன் முன்னோர்கள் இருந்த இடத்தில் வழிவழியாக வாழ்கிறார்கள். 

குடிமக்கள் அசுத்தமான பகுதியில் வாழ்கின்றார்கள் எனில் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தி அம்மக்களை மீண்டும் அங்குக் குடியமர்த்தப்படுவதே, ஒரு நகரம் எல்லாத் தரப்பு மக்களுக்குமானது என்பதற்கான ஜனநாயகச் சான்று. கூவத்தைச் சுத்தப்படுத்தும் திட்டத்தை ஆண்டாண்டுகாலமாக கிடப்பில்போட்டுவிட்டு அது முடியாமல்போக மக்களை மட்டும் அப்புறப்படுத்துவது யாரைத் திருப்திப்படுத்த என்கிற கேள்வி எழாமலில்லை. 

மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கே உருவாக்கும் நடைபாதைகள், நடப்பதற்கான நிலையில் அன்றி வாகனங்கள் நிறுத்தும் இடங்களாகத்தான் இன்று இருக்கின்றன. மக்கள் வெளியேற்றப்பட்ட சில பகுதிகளில் கம்பிவேலியால் சூழப்பட்ட பூங்காக்கள் கட்டியிருக்கிறார்கள். அவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா. இல்லை, புதர் மண்டிய அந்தப் பூங்காக்கள் இன்று வேறுபல காரியங்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன. காலங்காலமாக வாழ்ந்த மக்களை வெளியேற்றுகிறீர்கள் எனில், அதற்கு மாற்றாக அங்கே வேறு பல நல்ல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்யாமல் அந்தப் பகுதிகளை இன்னும் மோசமாக வைத்திருப்பது வெளியேற்றிய மக்களை அவமானப்படுத்துவதுபோல ஆகும்.

தலைமுறைகளாக அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டு அகதிகள்போல அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அங்கே, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளுடன்தாம் குடியமர்த்தப்படுகிறார்களா என்றால் அதுவும் நிச்சயம் இல்லை என்பதுதான் துயரம் நிறைந்த செய்தி. இதுபற்றி விரிவாகச் சமீபத்தில்தான் ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. 

அடித்தட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து வெளியேற்றப்படும்போது சென்னையின் தனித்துவங்கள் அழிந்துபோய் இருக்கும். வானளாவிய கட்டடங்களும், மெட்ரோ ரயில் நிலையங்களும் மட்டுமே சென்னையின் அடையாளமாக மாறிப்போய் இருக்கும். சென்னையின் அடையாளமாக முன்மொழியப்படும் இம்மக்களும், கூவம் நதியோரத்தில் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை முறையும், வாழ்ந்த இடமும் ஒரு வரலாற்றுத் தடயமாக மட்டுமே இனி காலத்தால் நினைவு கூரப்படும். `சென்னை தினம்' என நாம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்போது இங்குள்ள கட்டடங்களை நினைவுகூருவதுபோல இம்மக்களையும் அதேபோல கடந்து போவோம். ஆனால், அவர்கள் சென்னையைப் போல இன்னொரு நகரத்தை உருவாக்க அங்கே உழைத்துக் கொண்டிருப்பார்கள்! Trending Articles

Sponsored