மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட்... வழக்கு விவாதத்தில் நடந்தது என்ன?! - முழு விவரம்Sponsoredஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து முடிவு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூன்றுபேர் கொண்ட குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 22 ம் தேதி நடைபெற்ற 100 வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக் கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. ஜுலை மாதம் 5 ம் தேதி இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கியது. அதனையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 9 ம் தேதி நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையானது நிர்வாக மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காகத் திறந்து கொள்ளலாம் என உத்தரவிட்டது. மற்றபடி உற்பத்தி பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறியிருந்தது. அத்துடன் அடுத்து வரும் 10 நாள்களுக்குள் தமிழக அரசு மற்றும் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதன்படி 20 ம் தேதி இவ்வழக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

Sponsored


தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன்படி மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியமும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும் இணைந்து ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்த தரவுகளின்படி அறிக்கை அளித்தனர். தரவுகளின்படி ஸ்டெர்லைட் ஆலையானது 3.5 லட்சம் டன் காப்பர் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கொட்டியுள்ளதால் ஆற்றங்கரை முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையிடம் நீண்டகாலமாக அமிலங்களை முறையாகக் கையாளும் வசதிகள் இல்லை. அதிக அடர்த்தியுடைய இந்த அமிலங்கள் இயற்கைச் சூழலுக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Sponsored


ஸ்டெர்லைட் தரப்பு விளக்கத்தில், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேரை சுட்டுக் கொன்றதை மூடி மறைப்பதற்காகத்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர். நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு இருந்தபோதிலும் அதைச் சரிவர பயன்படுத்த விடவில்லை. மேலும், முறையான தரவுகளும் ஆதாரங்களும் இல்லாமல்தான் ஆலையை மூடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. 

காப்பர் கழிவுகள் கொட்டப்பட்ட விஷயத்தில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றுச்சுவரை ஒழுங்காகக் கட்ட வேண்டும் அதன் மூலம் காப்பர் கழிவுகள் ஆலைக்கு வெளியே கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது பசுமைத் தீர்ப்பாயம். மேலும், கழிவு சுத்திகரிப்பு மேலாண்மையை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியது. அதேசமயம், ஸ்டெர்லைட் ஏற்படுத்தும் மாசு குறித்த அறிவியல் ரீதியான ஆதாரங்களைத் தாக்கல் செய்வதற்குத் தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதை ஏற்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. ``ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறதா?” எனக் கேட்ட நீதிபதி ஆம் என்றால் அதற்கான ஆதாரங்கள் எங்கே எனக் கேட்டார். தமிழக அரசு சார்பில் எந்தப் பதிலும் வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் உங்களிடம் இல்லாமல் எப்படி ஆலையை மூடினீர்கள் என்ற கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார். இதைத் தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. 

இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியம், சந்துரு ஆகியோரின் பெயர்களை தலைமை நீதிபதி கோயல் பரிந்துரை செய்தார். இவர்களில் யாரிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சந்துரு இவ்வழக்கை விசாரிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு வேதாந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழரல்லாத உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். 

அதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவில் மத்திய மாசுக்கட்டுபாடு வாரியத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவரும் மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவரும் கட்டாயம் இடம்பெற வேண்டும். இரண்டு வாரங்களுக்கும் ஆய்வை ஆரம்பித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனிடம் பேசியபோது, ``கடந்த ஏப்ரலில் நடைபெற்ற விசாரணையின்போதே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை செய்த தவறுகள், ஆலையினால் ஏற்பட்ட பாதிப்புகள், சட்டத்தை மீறிச் செயல்பட்டது எல்லாம் உண்மைதான். அதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துடையது. தங்களது ஆலையால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெளிவுபடுத்த வேண்டியது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினரின் வேலை. மக்கள் போராட்டத்துக்கு முன்பு வரை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒழுங்காகச் செயல்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் போராட்டத்துக்குப் பின்புதான் கொஞ்சம் நியாயமாகச் செயல்பட ஆரம்பித்தனர். இந்த வழக்கில் அரசும் மாசுக் கட்டுப்பாடு வாரியமும்தான் உரிய ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்க வேண்டும். நாங்களும் அறிவியல்ரீதியான ஆதாரங்களை ஏற்கெனவே மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், அதை அவர்கள் பரிசீலனை செய்தார்களா எனத் தெரியவில்லை. மேலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் மட்டும் போதாது. மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். இப்போது அமைக்கவிருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவின் தலைவரான நீதிபதி இந்தப் பிரச்னையைப் புரிந்தவராக நியாயமாகச் செயல்பட்டால்தான் ஸ்டெர்லைட் ஆலையின் குற்றங்கள் உறுதிப்படுத்தப்படும்." என்றார். 

மேலும், அறிவியல்ரீதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான கழிவு மாதிரிகள் உட்பட ஸ்டெர்லைட் ஆலையின் உண்மையான மாதிரிகளை அவர்கள்தாம் வழங்க வேண்டும். இந்த மாதிரிகளைப் பரிசோதிக்கும் வசதிகள்கூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் ஒழுங்காக இல்லை. அப்படி இருக்கும்போது வலுவான ஆதாரங்களை எப்படிச் சமர்ப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் தமிழக அரசு தாமிர உருக்கு ஆலை தொடர்பாக கொள்கைரீதியான முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  

தீர்ப்புப் பற்றி ஸ்டெர்லைட்டின் கருத்துக் கேட்க அவர்களைத் தொடர்பு கொண்டோம். பதிலளித்த அனூப் என்பவர் ”இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசு சொல்வது போல நாங்கள் எந்த காப்பர் கழிவுகளையும் கொட்டவில்லை. உண்மையில், அது கழிவே இல்லை. அவையும் ஒரு புராடக்ட் தான். அதற்கு ஃபெரோ சாண்ட் என்று பெயர். அது கட்டட வேலைகளில் பயன்படுத்தப்படும். உலகளவில் இருக்கும் அத்தனை காப்பர் நிறுவனங்களும் ஃபெரோ சாண்டு-ஐ இப்படித்தான் பயன்படுத்துகின்றன.

நிர்வாகரீதியான அலுவல்களுக்கு ஸ்டெர்லைட்டைத் திறந்துகொள்ளலாம் என்று சொன்னபிறகும் எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளிமிடருந்து அனுமதி வரவில்லை. அதனால், எந்த வேலையையும் இன்னும் தொடங்கவில்லை. " என்றார்.Trending Articles

Sponsored