கேரள வெள்ளத்துக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுSponsoredமழையால் ஏற்பட்ட பேரழிவுக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். கேரள அரசு நினைத்திருந்தால் அழிவை குறைத்திருக்கலாம். மழை அதிகரிக்கும்பொது மாநில அரசு சரியான முடிவுகளை எடுக்கவில்லை என கேரள எதிர்கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இடுக்கி அணையின் முழுக் கட்டுப்பாடும் மாநில அரசிடம் உள்ளது. நீர்வள ஆதார அமைப்பும், மின்சார வாரியமும், அமைச்சர்களுக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அணை நிரம்பும் வரை திறக்காமல் இருந்தனர். பின்னர் அணையின் 5 ஷட்டர்களும் திறக்கப்பட்டு அதிக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறப்பதாக முன்னறிவிப்பு கொடுத்தார்கள். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை மக்களுக்கு கூறவில்லை. சாலக்குடி அணை ஜூன் 10-ல் முழுக் கொள்ளளவை எட்டியது. இதுபற்றி ஜூலை 24-ம் தேதி அரசுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டும் அரசு செவிசாய்க்கவில்லை.

Sponsored


பம்பையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஹக்கி உள்ளிட்ட 9 அணைகள் திறந்துவிடப்பட்டதால் மணிமலை ஆறு, பம்பை, அச்சன்கோயில் ஆறுகள் மொத்தமாக நிரம்பிவழிந்தன. இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்கள் தண்ணீரில் மூழ்கின. மலம்புழா அணை ஷட்டர் முதலில் 30 செ.மீ. திறக்கப்பட்டது. பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் 150 செ.மீ. திறக்கப்பட்டதால் மலம்புழா பகுதி தண்ணீரில் மூழ்கியது.

Sponsored


வயநாடு பனசுர அருவி அணை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டது. பனசுர அருவி அணை திறப்பு குறித்த தகவலை வாட்ஸ்அப் மூலம் அறிவித்ததாக மின்சார வாரியத்தினர் கூறுகிறார்கள். இது வாட்ஸ்அப்பில் அறிவிக்கவேண்டிய விஷயமா. குட்டநாடு 2 மாதமாக தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. குட்டநாட்டில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் மண் மேடுகள் மாற்றப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம். ஓகி புயல் குறித்து மத்திய அரசு எச்சரித்ததை மாநில அரசு கேட்கவில்லை. ஒகி புயலில் எத்தனைபேர் இறந்தார்கள் என இன்னும் தெரியவில்லை. இப்போது மழையால் ஏற்பட்ட பேரழிவுக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். கேரள அரசு நினைத்திருந்தால் அழிவைக் குறைத்திருக்கலாம். மழை அதிகரிக்கும்போது மாநில அரசு சரியான முடிவுகளை எடுக்கவில்லை. பேரிடர் ஏற்படும்போது யாரும் எதுவும் கூறமாட்டார்கள் என அரசு நினைத்திருக்கிறது. இந்த அழிவுக்கு காரணம் யார் என மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறுகிறேன். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் உறுதுணையாக நிற்போம். மழை வெள்ள பாதிப்புக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறேன். இதற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.Trending Articles

Sponsored