எல்.ஐ.சி பாலிசி பணத்தைக் கேரள மக்களுக்கு வழங்கிய கல்லூரி மாணவி!Sponsoredஎல்.ஐ.சி பாலிசி பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு கல்லூரி மாணவி ஒருவர் வழங்கியுள்ளார்.
கன மழையால் சீர்குலைந்து நிற்கும் கேரள மக்களுக்கு உதவிட பல்வேறு தரப்பினர் முன்வந்துள்ளனர். கேரளாவில் கன மழை ஓய்ந்தாலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.  மேலும், கேரள மழையில் சுமார் 370-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், சுமார் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர்  முகாம்களில் தங்க வைத்திருப்பதாகவும், பலரைக் காணவில்லை எனவும் கேரள அரசு மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையரிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமிழக மக்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள். தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்கள், தமிழக அரசு, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள்  நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலிருந்தும் கேரளா மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.  இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம், திருச்சி பார்வையற்றோர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பில் பார்வை இழந்தவர்கள், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ரூபாய் 20,000 மதிப்புள்ள போர்வை, சேலை, வேட்டி, கைலி, துண்டு போன்ற பொருள்களை வழங்கினர்.

திருச்சி  மண்ணச்சநல்லூர்  மற்றும் மணப்பாறை பகுதிகளில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்கள் திருச்சி சின்னசாமி, மண்ணச்சநல்லூர் புருசோத்தமன்  மற்றும் மணப்பாறை மு.விஜயன் ஆகியோர் முன்னிலையில் கேரள மாநிலத்தில்  பாலக்காடு, பட்டாமி பகுதிகளுக்கு சுமார் 16 டன் எடையுள்ள 7லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள், அரிசி ஆகியவற்றை  திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

Sponsored


மேலும், இன்று மதியம் திருச்சி-மதுரை சாலையில் உள்ள திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படிக்கும் மாணவி ஸ்ருதி என்பவர், தனது தந்தை கிருஷ்ணகுமார் சகிதமாக வந்தவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து, 80ஆயிரத்து 74 ரூபாயை வழங்கினார். அந்தப் பணம், மாணவி பெயரில் எல்.ஐ.சி-யில்  கட்டப்பட்டு வந்த பணம். கேரள மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் கஷ்டப்படுவதைக் கண்ட ஸ்ருதி, தனது ஆயுள் காப்பீட்டுத் திட்ட பாலிசியை முடித்து, அதன்மூலம் கிடைத்த தொகையை அப்படியே மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்ததாகக் கூற, அவரை மாவட்ட ஆட்சியர் மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிகாரிகளும் பாராட்டினார்கள். இதேபோல, மாணவி ஸ்ருதியை நண்பர்கள், திருச்சி சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.

Sponsored


கன மழை, வெள்ளம் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அடையாளம் காட்டுகின்றன. அந்த வகையில், 8 வயது விழுப்புரம் மாணவி அனுப்பிரியா, மாணவி ஸ்ருதி ஆகியோர் என உதவும் உள்ளங்களின் பட்டியல் நீள்வது ஆரோக்கியமானது.Trending Articles

Sponsored