`ஆறுமணி நேரம் போதை... ஒரு மாத்திரையின் விலை ரூ.3,000' - ஐ.டி வேலையை உதறிய இன்ஸ்பெக்டரின் மகன்Sponsored
சென்னை திருவான்மியூரில் போதை மாத்திரைகளை விற்கும்போது சிக்கிய பட்டதாரி வாலிபர், இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் என்று தெரியவந்துள்ளது

சென்னை திருவான்மியூரில் காரில் வருபவர்களுக்கு மட்டும் போதை பொருள்கள் விற்கப்படுவதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் தலைமையிலான போலீஸார், போதைப் பொருள் விற்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகில் திவாரி என்பவரை பிடித்து அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் போதைப் பொருள்களைக் கைப்பற்றினர். அது அனைத்தும் போதை மாத்திரைகள். ஸ்டாம்ப் வடிவத்திலிருக்கும் புதுரக போதைப் பொருள் என்று தெரியவந்தது.

Sponsored


 அவரை எப்படி பிடித்தோம் என்பதை போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் விவரித்தார். ``கல்லூரி மாணவ, மாணவிகள், ஐ.டி துறையில் பணியாற்றுபவர்களுக்குப் போதைப் பொருள், மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். போதைப் பொருளை விற்பவரை கையும் களவுமாகப் பிடிக்க நாங்கள் ஒருவரைப் போதை மாத்திரையை வாங்க ஏற்பாடு செய்தோம். அதன்படி அந்த நபர் அங்கு காரில் சென்றார். அவரை ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது லேப் டாப் பேக்குடன் திருவான்மியூர், ராஜாஜி நகரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியில் வந்த வாலிபர், பணத்தைப் பெற்றுக்கொண்டு போதை மாத்திரைகளைக் கொடுத்தார். உடனடியாக அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த போதைப் பொருள், மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம்.

Sponsored


அவரின் பெயர் நிகில் திவாரி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த அவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதில் கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் பார்ட் டைம் வேலையை இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போதுதான் போதை மாத்திரை பிசினஸ் குறித்த தகவலை அவர் பார்த்துள்ளார். உடனடியாகப் போதை மாத்திரை, போதைப் பொருள்களை விற்கும் மலேசிய நிறுவனத்துக்கு ஆன் லைனில் ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்களும் ஆர்டரின் பெயரில் போதை மாத்திரைகளை டெலிவரி செய்துள்ளனர். அதை முதலில் நிகில்திவாரி சாப்பிட்டுப் பார்த்துள்ளார். ஒரு மாத்திரையைச் சாப்பிட்ட அவர், ஆறுமணி நேரம் போதையில் திளைத்துள்ளார். அதன் பிறகு அந்தப் போதைக்கு அவர் அடிமையாகிவிட்டார்.

பிறகு, ஐ.டி வேலையை விட்டுவிட்டு போதைப் பொருள்களை விற்கும் தொழிலுக்கு மாறியுள்ளார். அதில் அவருக்கு கைநிறைய பணமும் போதையும் கிடைத்துள்ளது. அதன்மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பிறகு, அந்த மாத்திரைகளை ஐ.டி துறையில் உள்ள தன்னுடைய நண்பர்களிடம் விற்றுள்ளார். ஒரு மாத்திரையின் எடை 10 கிராம் வரை இருக்கும். ஒவ்வொரு போதைக்கு ஏற்ப மாத்திரைகளின் விலை வேறுபடுகின்றன. குறைந்தபட்சம் ஒரு மாத்திரையை நிகில் திவாரி 3,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். லேப் டாப் பேக்கில் போதை மாத்திரைக் கொண்டு சென்றதால் யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை" என்றார். 

 போலீஸாரிடம் சிக்கிய நிகில் திவாரியின் அப்பா உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரவாதிகளின் தடுப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். அவர், போதைப் பொருள், மாத்திரைகளை விற்றதற்காகக் கைதான தகவலை தெரிந்த அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் போதைப் பொருள்களைத் தொடர்ந்து நிகில் திவாரி பயன்படுத்தியதால் அவர் உடலளவிலும் மனதளவிலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மாத்திரைகளைத் தொடர்ச்சியாகவும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் நரம்புகள் வெடித்து உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Trending Articles

Sponsored