வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்ட நினைவு தினம்! மாணவர்கள் மலர் தூவி மரியாதை!Sponsoredவெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு கடலையூரில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்ததுடன், தேசபக்தியை வளர்க்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மகாத்மா காந்தியடிகளால் 1942-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் சார்பில், போராட்டம் அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்குட்பட்ட கடலையூரில் ஆகஸ்ட் 22-ம் தேதி கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்த, வெயிலுகந்த முதலியார் தலைமையில் 34 பேர், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தை நடத்தி ஆங்கிலேயேருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.

Sponsored


Sponsored


அப்போது, ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சங்கரலிங்க முதலியார் என்பவர் குண்டடிபட்டு உயிரிழந்தார். மாடசாமி முதலியார் என்பவரது இடுப்பில் குண்டு பாய்ந்தும், ராமசாமி முதலியார் என்பவரது கால் கட்டை விரல் துண்டாகி இருவரும் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டனர். இதில், 34 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இன்னல்களில் இவர்கள் உயிரிழந்தனர். இத்தியாகிகளின் போராட்டத்தை நினைவுகூரும் விதமாக, கடந்த 2008-ல் பொதுமக்கள் நினைவுச் சின்னம் அமைத்தனர். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி இந்த நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 

ஆகஸ்ட் 22-ம் தேதியான இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்ட நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கடலையூரில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவுச் சின்னத்துக்கு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அனைவரிடமும் தேசப்பக்தியையும் தேசப்பற்றையும் வளர்க்கவும், தேசிய ஒருமைபாட்டை காக்கவும், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அரசு சார்பில், இப்பகுதியில் உயிரிழந்த 34 தியாகிகளுக்கு மணிமண்படம் அமைத்து, இதே நாளில் ஒவ்வோர் ஆண்டும் மரியாதை செய்யப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Trending Articles

Sponsored