முக்கொம்பு மேலணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை எனத் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Sponsored


கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாகக் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதை அடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் கரைகளைத் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாள்களுக்கு முன்பு கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 9 மணியளவில் முக்கொம்பு மேலணையில் உள்ள 8 மதகுகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

Sponsored


அணையின் 8 மதகுகள் உடைந்த இடத்தைத் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், ``முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை. முதல் கட்டமாக அணையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலணையில் உடைப்பையடுத்து நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்பாக உள்ளது. விவசாயத்துக்குத் தேவையான நீர் காவிரியில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழைமையான அணைகள் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும்” என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored