58 கிராம பாசனக் கால்வாயில் உடைப்பு! – சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்



அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற 58 கிராம பாசனக் கால்வாயில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Sponsored


உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டக்களத்தில் இறங்கினர். இவர்களின் போராட்டத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வைகை அணை நிறையும்போது வெளியேற்றப்படும் உபரி நீரை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர் கிராமத்தினர். இறுதியாக, கடந்த 1996-ம் ஆண்டு கால்வாய் மூலமாகத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கான அரசு ஒப்புதல் வழங்கியது. தொடர்ந்து 1999-ம் ஆண்டு கால்வாய் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

Sponsored


58 கிராமங்கள் இணைந்து போராடி வென்றதால், இத்திட்டத்துக்கு 58 கிராம பாசனக் கால்வாய் என்றே பெயரிடப்பட்டது. பின்னர் நிலக்கோட்டை வட்டார கிராமங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டது. வைகை அணையின் வலதுபுறக் கரைப் பகுதியில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகில் இருந்து 27.735 கிலோ மீட்டர் தூரம் பிரதானக் கால்வாய் அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து, உத்தப்ப நாயக்கனூரில் இரு கால்வாய்களாகப் பிரித்து 11.925 கிலோமீட்டர் தூரம் இடப்பக்கமும், 10.24 கிலோமீட்டர் தூரம் வலப்பக்கமும் கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் செல்லும் வழியில், மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதி இடையில் உள்ளதால், 3 தொட்டிப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. 18 ஆண்டுகள் நீடித்த கால்வாய் அமைக்கும் பணியானது முடிவடைந்து, நேற்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சோதனை ஓட்டமாக, கால்வாய் மதகைத் திறந்துவைத்து வைத்தார். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உடன் இருந்தனர்.

Sponsored


இந்த நிலையில், நேற்று இரவு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வைகை அணை கோட்டப் பொறியாளர் செல்வத்திடம் பேசியபோது, ``அணைக்கரைப்பட்டியை அடுத்த புதூர் என்ற இடத்தில்தான் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டதாக நேற்று இரவு 11 மணிக்குத் தகவல் கிடைத்தது. உடனே, வைகை அணையில் உள்ள கால்வாய் மதகு மூடப்பட்டது. உடைப்பைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.” என்றார்.



Trending Articles

Sponsored