பெண் எஸ்.பிக்கு போலீஸ் ஐ.ஜியிடமிருந்து நள்ளிரவில் சென்ற போன் கால்Sponsoredசென்னையில் பெண் எஸ்.பி ஒருவர், போலீஸ் ஐ.ஜி மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஐ.ஜியின் போன் அழைப்புகள் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் பணியாற்றும் கடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி மீது, அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி, பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் விசாகா கமிட்டி இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதற்கிடையில் பெண் எஸ்.பி. கொடுத்த ஆதாரங்களை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் ஐ.ஜியின் கடந்த ஆறு மாத கால போன் அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடவுளின் பெயரைக் கொண்ட போலீஸ் ஐ.ஜி ஒருவர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அவர் தமிழகம் முழுவதும் பணியாற்றியுள்ளார். அந்த இடங்களில் அவரின் நடவடிக்கைகள் எப்படியிருந்தன என்று உளவுத்துறை மூலம் ரகசிய ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஐ.ஜிக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. அப்படியிருக்கும்போது பெண் எஸ்.பி ஏன் இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று விசாரணை நடத்தப்பட்டது. ஐ.ஜி, எஸ்.எம்.எஸ்களை அனுப்பினார் என்று பெண் எஸ்.பி புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

Sponsored


இதற்கிடையில் ஐ.ஜி பயன்படுத்தும் செல்போன் நம்பர்களின் கால் அழைப்புகளை போலீஸார் எடுத்துள்ளனர். அதில் சில அழைப்புகள் பெண் எஸ்.பிக்கு நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளன. அவர், எதற்காக அந்த நேரத்தில் பெண் எஸ்.பிக்குப் பேசினார் என்று விசாரணை நடத்தப்படும். மேலும், பெண் எஸ்.பியின் போனையும் ஐ.ஜியின் போனையும் முழுமையாக ஆய்வு செய்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். விசாகா கமிட்டி விசாரணை நடத்தி அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில்தான் ஐ.ஜி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்த பெண் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். இதனால் இனி அவருக்குக் எந்தவித தொந்தரவும் ஏற்படாது. பெண் எஸ்.பியிடம் பெண் போலீஸ் அதிகாரிகள் மூலம் தனியாக விரைவில் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இதுகுறித்து ஐ.ஜி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``வழக்கு தொடர்பாகத்தான் இரவு நேரங்களில் ஐ.ஜி பேசியிருப்பார். அதையெல்லாம் அவருக்குக் எதிரான குற்றச்சாட்டுகளாகக் கூறுவது சரியில்லை. ஐ.ஜி வேலை பார்க்கும் அலுவலகத்தில் எஸ்.பி ரேங்கில் இன்னும் இரண்டு பெண்கள் இருக்கின்றனர். டி.ஐ.ஜி ரேங்கில் இன்னொரு பெண் அதிகாரி பணியாற்றுகிறார். இதைத்தவிர ஏராளமான பெண் அதிகாரிகளும், காவலர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஐ.ஜி மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் தெரிவிக்காத நிலையில் பெண் எஸ்.பி-யின் புகார் கொடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இந்தப் புகாரை விசாகா கமிட்டி முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றனர்.

பெண் எஸ்.பி பணியாற்றிய அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``ஐ.ஜி, வழக்குகள் தொடர்பாக அடிக்கடி மீட்டிங் நடத்துவார். அதுதொடர்பாகத்தான் போனில் பேசுவார். அதைத்தவிர்த்து வேறு எதுவும் அவர் எங்களிடம் பேசியதில்லை. இந்த அலுவலகத்துக்கு அவர் வந்தபிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவந்தார். இதனால், தவறு செய்தவர்கள் எல்லாம் அச்சத்தில் இருந்தனர். அதேநேரத்தில் பெண் எஸ்.பியும் அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் சகஜமாகப் பழகுவார். ஆனால், சில மாதங்களாக அவர், ஏதோ ஒரு பிரச்னையில் இருந்தார். அது என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர், அளித்த புகார், அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார். 

 அனைத்தும் ரகசியமாக இருக்கட்டும் 

விசாகா கமிட்டியின் தலைவரான ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால், ஐ.ஜியின் பாலியல் விவகாரத்தை முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். பெண் எஸ்.பியிடமும் ஐ.ஜியிடமும் நடத்தப்படும் விசாரணை குறித்த தகவல்கள் எக்காரணமும் கொண்டு வெளியில் தெரியக்கூடாது. ஏனெனில் இந்தப் புகார், தமிழக காவல்துறையின் கௌரவம் தொடர்புடையது. எனவே, விசாரணை முழுவதும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதனால் விசாகா கமிட்டியில் இருப்பவர்கள் அனைவரின் நடவடிக்கைகளும் ரகசியமாக வேவு பார்க்கப்படுகிறது. யார் மூலம் தகவல்கள் வெளியில் தெரிந்தால் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். Trending Articles

Sponsored