``அழகிரி ஸ்கெட்ச் எல்லாம் தூளாகும்!" அறிவாலய நம்பிக்கைSponsoredமுன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரியின் மறுஅரசியல் பயணம், செப்டம்பர் 5-ம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியிலிருந்து ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக, வரும் 28-ம் தேதியன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, அதகள அரசியலுக்கு அடுத்தமாதம் அடிகோலும் அழகிரி பக்கம், தங்கை கனிமொழி சாய வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. தி.மு.க-வில் கனிமொழிக்கான அங்கீகாரம், இந்த மாதமே கிடைத்துவிடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளரான பெருந்துறை சுகுணா சக்தி என்கிற சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் அழகிரியை தலைவராக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. `அஞ்சாநெஞ்சன் சொல்லி விட்டார், தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கிய நம் பயணத்தில், இருபது பேருந்துகளுக்குக் குறையாமல் இங்கிருந்து நாம் போகவேண்டும், அண்ணனின் பலத்தைக் காட்ட வேண்டும்' என்றெல்லாம் அந்தக் கூட்டத்தில் முஷ்டி மடக்கிப் பேசியிருக்கிறார்கள். கொடுமுடி, பெருந்துறை, மொடக்குறிச்சி போன்ற ஈரோட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்று அழகிரி ஆதரவாளர்களின் கூட்டம் நடந்திருக்கிறது. அழகிரிக்கான ஆதரவுக் குரல்கள் இப்படி வெளிப்படக் காரணம், `அடுத்தமாதம் 5-ம் தேதியன்று, என் பலத்தைக் காட்டுகிறேன்' என்று அழகிரி அளித்த பேட்டிதான்.

Sponsored


ஆனால், அழகிரியின் பேட்டிக்கு எதிர்வினையாற்றக் கூடிய வேலைகளைத் தி.மு.க. தரப்பிலும் தொடங்கியிருக்கிறார்கள். கரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில், `செயல் தலைவரும், வருங்கால தி.மு.க தலைவரும், தமிழகத்தை வழிநடத்திச் செல்லக்கூடியவருமான மு.க. ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த நாம் அனைவரும் பாடுபடுவோம்' என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

Sponsored


`கரூர் மாவட்டத்தைப் போன்று, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, அதில் நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்டு அறிவாலயத்துக்கு அனுப்பி வைப்போம்' என்று கழக உடன்பிறப்புகள் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். கட்சிக்குத் தலைவராக ஸ்டாலினும், துரைமுருகனை பொருளாளராகவும் நியமிப்பதற்கு, கழக நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி.-யை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவாலயத்துடன் நெருக்கமானவர்கள்.

மு.க. அழகிரியோ தன் அரசியல் அதிரடியுடன், இன்னொரு மையப் பிரச்னையையும் செப்டம்பர் 5-ம் தேதியன்று கிளப்பவிருக்கிறார். அதைத் தமிழகக் காவல்துறையினர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்பட்டுவிடாதபடி, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய சவால் போலீஸாருக்கு இப்போதே ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்குத் தொல்லையில்லாமல் அமைதியான சூழலைப் பாதுகாக்க வேண்டிய சவாலும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.

இந்நிலையில், அழகிரிதரப்பை `கூல்' செய்ய ஸ்டாலின் தரப்பிலிருந்தோ, கருணாநிதி குடும்பத்தினரிடமிருந்தோ எந்த முன்முயற்சியும், இதுவரை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. `தலைவர் இருக்கும்வரை நாம் காத்துவந்த அமைதி போதும். இனி கட்சியைக் காப்பாற்றும் வேலையை மட்டும் பார்ப்போம்' என்று சீனியர்கள் தரப்பிலிருந்து வந்த ரிப்ளையே அழகிரியை ஸ்டாலின்தரப்பு முற்றிலுமாக ஒதுக்கி வைக்கக் காரணமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தி.மு.க-வின் சீனியர் தொண்டர்கள் சிலர் நம்மிடம், ``பொன்விழாவைக் கடந்தும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் சென்ற கருணாநிதி இருந்தவரை, தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களில் அழகிரி ஆர்வம் காட்டவில்லை. அப்படியே அவர் ஆர்வம்காட்ட முயன்ற போதெல்லாம், கருணாநிதியால் அடக்கி வைக்கப்பட்டார். தி.மு.க-வின் `தென் மண்டல அமைப்புச் செயலாளர்' என்ற பதவியே அழகிரிக்காகத்தான் புதிதாக உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அழகிரியின் ஆதரவாளர்கள், பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டு, தற்போது அந்தப் பதவிகள் அனைத்தும் ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் உள்ளது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் யாரும் பலம்பொருந்தியவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழலில் அழகிரி தற்போது கட்சியிலேயே இல்லை. கருணாநிதியின் சமாதிக்கு அவர் தாராளமாகச் செல்லலாம். சென்று வரட்டும். அவரை யாரும் தடுக்கப்போவதில்லை. தி.மு.க.வை காலங்காலமாக எதிர்த்த பல தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம்கூட இப்போது கருணாநிதியின் சமாதிக்கு தினமும் வந்து விட்டுத்தான் போகிறார்கள். எனவே, அழகிரி கருணாநிதி சமாதிக்கு வந்துதான் தன் பலத்தைக் காட்டவேண்டும் என்பது அல்ல; இருக்கிற இடத்தில் இருந்தபடி, `தளபதியைத் தலைவராக ஏற்கிறேன்' என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னாலே போதும். அடுத்த நிமிடமே, அறிவாலய வாசலில் `அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழ்க' என்று நாங்களே பேனர் வைத்து விடுவோம். அதைவிடவா, அவருக்கு வேறு பலம் வேண்டும். அழகிரி தற்போது வேண்டாத வேலையில் ஈடுபடுகிறார். `அண்ணன்-தம்பிக்குள் சண்டை, உடைந்தது தி.மு.க' என்று நாளேடுகளுக்குத் தலைப்புச் செய்தியைக் கொடுக்கும் அசைன்மென்ட் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல அசைன்மென்ட்டுகளைப் பார்த்த இயக்கம் தி.மு.க. என்பது, அழகிரி அறிந்ததுதான். மறந்து போயிருக்கும் அதை, மீண்டும் அழகிரி பார்க்கத் துடிக்கிறார் போலிருக்கிறது" என்றனர்.Trending Articles

Sponsored