‘ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்கள்?’- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைப்பு



Sponsored



ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷிவாக்ஸ் ஜல் வசீப்தர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து, மே 28-ம் தேதி ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு சீல் வைத்து ஆலை மூடப்பட்டது.  இதைத் தொடர்ந்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது.

”மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவற்றை கையாளும் வகையில் அலுவலக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” என ஆலை தரப்பில் கோரப்பட்டது. ``நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் நிர்வாக அதிகாரிகள் ஆலைக்குள் செல்லலாம். எவ்விதமான உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள அனுமதி இல்லை” என தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Sponsored


நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், “ ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும்” என தீர்ப்பாயம் அறிவித்தது.

Sponsored


இந்தக் குழுவில், ``தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. கர்நாடகா, கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் இருந்து நியமிக்கலாம்.” என ஆலைத் தரப்பில் தீர்ப்பாயத்தின் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கக் கூடாது எனக் கூறி, தமிழக நீதிபதிகள் நடுநிலை தவறியவர்கள் என பொருள்படும்படியாக ஆலைத்தரப்பின் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷிவாக்ஸ் ஜல் வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. இக் குழுவில் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் அதிகாரிகள் இருவர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் குழுவில் தமிழர்கள் யாரும் இடம்பெறக்கூடாது என ஏற்கெனவே வேதாந்தா நிறுவனம் அளித்த கோரிக்கையின்படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



Trending Articles

Sponsored