`இதில் போய் ஈகோ பார்ப்பதா?'- வைகோ வேதனை!Sponsoredஇயற்கைப் பேரிடர்களால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது, மனிதாபிமான முறையில் வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இதில்போய் ஈகோ பார்க்கக் கூடாது. இந்த ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ, ஊழல் சரியாக நடக்கிறது'' என்று அ.தி.மு.க அரசை கடுமையாகச் சாடினார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

அரியலூரில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”காவிரியில் பெருமளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோதும் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, உரியக் காலத்தில் தூர்வாரப்படாததும் மணல் கொள்ளையும் முக்கியக் காரணமாகும். வரத்து வாய்க்கால்கள் மற்றும் மதகுகளைச் சீரமைக்கவேண்டிய நேரத்தில் சீரமைக்காமல், அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்றதன் விளைவே தற்போது முக்கொம்பு மதகுகள் சேதமடைந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு கொள்ளிடத்தில் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்கள். நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. தற்போது, தூர் வாரப்படும் என்பது குதிரை ஓடிய பிறகு லாடம் பூட்டுவது போன்றது. குடிமராமத்துப் பணிகளை முறையாகச் செயல்படுத்தவில்லை. எனவே, இதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ ஊழல் சரியாக நடக்கிறது.

ம.தி.மு.க சார்பில், செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழா ஈரோட்டில் நடைபெறும். இயற்கைப் பேரிடர்களால் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது மனிதாபிமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொள்ள அனுமதி தர வேண்டும். இதற்காக, சட்ட விதிகளையும் கடந்த கால முடிவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். கேரளாவில் 2 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை மத்திய அரசு தர முடியாதபோது, வெளிநாட்டிலிருந்து கொடுக்கப்படும் நிதியை பெற்றுக்கொள்வதுதான் நியாயம். இதில்போய் ஈகோ பார்க்கக் கூடாது'' என்று கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored