``அணை உடையத்தான் செய்யும்..!" "கவனம் தேவை" - முக்கொம்பு அணை பஞ்சாயத்துSponsoredமுக்கொம்பு கதவணை உடைப்பு... டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சியையும் சேர்த்தே உடைத்துப் போட்டிருக்கிறது! பெருமழையின் காரணமாகக் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பிவரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து நீரில் மூழ்கியது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முக்கொம்பு கதவணைப் பாலம் உடைந்திருப்பது விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது. 9 மதகுகள் உடைந்திருக்கும் சூழலில், மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரியாற்றுத் தண்ணீரைக் கல்லணைக்குத் திருப்பியனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடைந்த மதகுகள் வழியாக வெளியேறும் காவிரி நீர், வீணாகக் கடலில் சென்று சேர்கிறது. காவிரிப் பாசனத்தை நம்பி, விவசாயப் பணிகளை ஆரம்பித்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் இதனால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து 'தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்க'த்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதனிடம் பேசினோம்... ''2005-ம் வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது. அப்போதே, அணைப் பராமரிப்பு குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், 13 வருடங்களுக்குப் பிறகு இப்போது இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கல்லணையில் நீர் சேமிக்க முடியவில்லை... ஆற்று நீர் முழுவதும் சமுத்திரத்திலேதான் போய் வீணாகிறது. இப்போது அவசர நடவடிக்கையாக ராணுவத்தைக் கொண்டு முக்கொம்பில், தற்காலிகப் பாலம் அமைக்க வேண்டும். 

Sponsored


முக்கொம்பு கதவணை உடைப்பை முன் எச்சரிக்கையாகக் கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், கல்லணை பலமாக இருக்கிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இது கல்லணையின் அடிப்பாகத்தைப் பரிசோதித்து கிடைத்திருக்கும் முடிவு. மற்றபடி அணையின் கட்டுமானம் எந்தளவு உறுதியாக இருக்கிறது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. இன்னும் 2 மாதங்களில் மறுபடியும் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிடும். அப்போதும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. 

Sponsored


திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல்லணை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையான பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 28-ம் தேதியுடன் மேட்டூர் அணை மூடப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு ஜூன் 12-ம் தேதிதான் மறுபடியும் அணை திறக்கப்படுகிறது. இந்த 4 மாத இடைவெளியில், அணைக் கட்டடப் பராமரிப்புப் பணிகளை அரசு மேற்கொண்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. செய்வார்களா'' என்று கேள்வி கேட்டு முடித்தார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், ''கல்லணையை நம்பித்தான் டெல்டா பாசனமே இருக்கிறது என்ற நிலையில், முக்கொம்பு கதவணை உடைந்திருப்பது தமிழக அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அணை பராமரிப்பு என்ற பெயரில், ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதி எல்லாம் எங்கே போனது? பராமரிப்புப் பணி நடைபெற்றிருந்தால், இப்படியொரு விபத்து ஏற்படுவதை முன்னரே கணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே? 

நீர்ப்பாசன செயல்பாடுகளில், ஆளுங்கட்சி எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் முக்கொம்பு சம்பவம். கல்லணை நீரை நம்பி, நாற்று நடும் வேளைகளை ஆரம்பித்துவிட்ட விவசாயிகள் இப்போது கதிகலங்கி நிற்கிறார்கள். இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம்... மணல் கொள்ளைதான். 5 அடிக்கு மட்டுமே அள்ள வேண்டிய மணலை 50 அடி ஆழத்துக்கும் மேல் சுரண்டி எடுத்துச் சென்றுவிடுவதால், ஆற்றில் தண்ணீர் வரும்போது, பள்ளங்களை மணலால் நிரப்பிச் செல்லும் தண்ணீர் அதற்காக மணல் திட்டுகளை அடித்துச் செல்கிறது. அந்த வகையில், முக்கொம்பு கதவணையின் பிடிமானமாக இருந்த மணல் திட்டுகளும் அடித்துச் செல்லப்பட்டு அணையே உடைந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதாவது, சுதாரித்துக்கொண்டு தமிழகத்தின் அனைத்து அணைகளின் உறுதியையும் அரசு பரிசோதித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கையாக முன்வைத்தார்.

திருச்சி தொகுதி அ.தி.மு.க எம்.பி-யான ப.குமாரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டோம்... ''ஆண்டுதோறும் அணை பராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றனதான். ஆனாலும் 180 வருடங்களுக்கும் மேற்பட்ட அணை என்பதால், பலமிழந்து இப்போது உடைந்திருக்கிறது. மனிதர்களேகூட வயது மூப்பின் காரணமாக மரணமடைவது என்பது இயற்கைதானே... அதை யாராலும் தடுக்க முடியுமா என்ன? 
நாளை முதல்வரே முக்கொம்புக்கு நேரில் வந்து பார்வையிட்டு, தற்காலிகப் பாலம் கட்டுவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்'' என்றார்.

'அணை பராமரிப்புப் பணி முறையாக நடைபெற்றிருந்தால், இந்த விபத்தை முன்கூட்டியே கணித்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே...' என்ற நமது கேள்விக்கு எம்.பி-யிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை!Trending Articles

Sponsored