`ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்' - திருமாவளவன் எச்சரிக்கை!Sponsored``ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட ஆலைத் தரப்பு முயன்று வருகிறது. அதற்கு தமிழக அரசு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை செய்துவரும் ஒருநபர் கமிஷனை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஆலைத்தரப்பில் பகிரங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு சாதகமான சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் வேதனைக்குள்ளான ஒன்று. இந்த ஆலை மூடப்படுவதாக அறிவித்த அரசாணை நிரந்தரமாக மூடப்படுவதற்கு வலிமை பெற்றதாக இல்லாததுதான் அதற்குக் காரணம். இதைப் பயன்படுத்தி ஆலைத்தரப்பு, மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்பே அறிக்கை வெளியிட்டது.

Sponsored


தற்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழுவை பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்கக் கூடாது என, ஆலைத்தரப்பு ஏற்கெனவே தன் வாதத்தில் கூறியுள்ள நிலையில், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்.

Sponsored


ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட மக்களை சிதறடித்துவிட்டோம். அச்சுறுத்தி கலைய வைத்துவிட்டோம் என நினைக்காமல் நிரந்தரமாக மூடும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசு மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு ஆலை, மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வெடிக்கும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிசன் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை சிலநாள்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இறந்தவருக்கு சம்மன் அனுப்பியது வேதனைக்கு உரியது. வெட்கக் கேடானது. வெறும் கண் துடைப்புக்காகவே இந்த ஒருநபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, இந்த ஒருநபர் கமிஷனை உடனடியாகத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும். அதில் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள சி.பி.ஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.  Trending Articles

Sponsored