காவிரி ஆற்றில் பாய்ந்த கண்டெய்னர் லாரி - டிரைவர் பலியான சோகம்!Sponsoredஈரோடு மாவட்டம், பவானி அருகே காவிரி ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவற்றை உடைத்து ஆற்றில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி, 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது.

நேற்று அதிகாலை கோவையிலிருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சேலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் பவானிக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிக்கும் இடையேயுள்ள லட்சுமி நகர் பகுதியில் காவிரி ஆற்றின் பாலத்தில் கண்டெய்னர் லாரி வந்தபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, காவிரி ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு ஆற்றினுள் பாய்ந்தது. ஆற்றினுள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றதால், லாரி விழுந்த இடம் தெரியாத அளவுக்கு நீரில் மூழ்கியது. இந்த தகவலறிந்ததும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Sponsored


Sponsored


காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றினுள் விழுந்த கண்டெய்னர் லாரியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பரிசல் ஓட்டுபவர்களின் உதவியோடு ஆற்றில் விழுந்த லாரியைத் தேடும் பணிகள் நடைபெற்றது. மேலும், ஈரோட்டில் இருந்து இரண்டு மிகப்பெரிய ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, ஆற்றினுள் மூழ்கிய லாரியை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆற்றில் ஓடும் தண்ணீரின் வேகத்தை மீறி, லாரியை கரைக்கு ஏற்ற முடியாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் திணறினர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக, ஆற்றில் விழுந்த கண்டெய்னர் லாரி மீட்கப்பட்டது.

லாரியினுள் சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிரைவர் உடல் நசுங்கி இறந்து கிடந்தார். விசாரணையில், அவருடைய பெயர் சிவக்குமார் என்பதும், அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. பார்சல் ஏற்றி வந்த லாரியில் மகாலட்சுமி கார்கோ சர்வீஸ் என்று எழுதப்பட்டிருந்தது. லாரியின் உரிமையாளர் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது. இது சம்பந்தமாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், விபத்துக்குள்ளான லாரியில் வேறு யாராவது பயணித்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Trending Articles

Sponsored