‘எங்களை கருணைக்கொலை பண்ணிடுங்க’ - கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த குடும்பம்!Sponsoredஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வந்த கூலித் தொழிலாளி ஒருவர், ‘எங்களை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள்’ என மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கனிராவுத்தர் குளம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித் தொழிலாளியான இவர், தினசரி கிடைக்கின்ற வருமானத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காந்தி நகர் பகுதியில் இவர்கள் வசித்துவந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால், அந்த வீட்டை இடித்துவிட்டு பிரதமரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீடு கட்டி வருகிறார்.

Sponsored


Sponsored


இவர்களுடைய வீட்டின் மேல், மின்சாரக் கம்பிகள் செல்வதால் கட்டடடத்தை மேல் எழுப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மின்சார வாரியத்தை அணுகிய ராஜேந்திரன், `எங்களுடைய வீட்டுக்கு மேலே செல்லும் மின்சாரக் கம்பிகளை, மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுங்கள். இதனால் என்னுடைய சொந்த இடத்தில் வீடு கட்ட முடியாத சூழல் இருக்கிறது’ என நிலைமையை விவரித்திருக்கிறார். ‘உங்க வீட்டுக்கு மேல கரண்ட் கம்பி போடுறப்ப, எங்க போன... உன் இஷ்டத்துக்கு நாங்க வேலை பார்க்க முடியாது. அந்தக் கம்பியை வேற வழியா கொண்டு போகணும்னா கொஞ்சம் செலவாகும். அதை நீ தான் கொடுக்கணும்’ என மின்சார வாரிய அதிகாரிகள் பேரத்துக்கு அடி போட்டிருக்கின்றனர். 15 ஆயிரத்தில் ஆரம்பித்த பேரம் கடைசியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றிருக்கிறது. ‘நானே அரசாங்கம் கொடுக்குற காசுல வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க கேக்குற பணத்துக்கு நான் எங்க போவேன்’ என அதிகாரிகளிடம் ராஜேந்திரன் கண்ணீர் வடித்திருக்கிறார். இறுதியாக, ‘உங்க வீட்டுக்கு மேல போகும் கரண்ட் கம்பியை வேறு இடத்துக்கு மாத்த ஆகுற செலவை, அரசாங்கம் ஏத்துக்கிட்டா நாங்க வேலை செஞ்சித் தர்றோம்’ என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். 

மாவட்ட ஆட்சியரிடமும் இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்து ஓய்ந்து போன ராஜேந்திரன், ஒரு கட்டத்தில் பிரதமர் முதல் முதல்வர் வரை 12 பேருக்கு இந்தப் பிரச்னையை விவரித்து கடிதம் எழுதியிருக்கிறார். ராஜேந்திரனின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதமும் வந்திருக்கிறது. இருந்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கின்றனர். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் நேற்று (ஆகஸ்ட் 23) மாலை குடும்பத்தோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ``எங்களுடைய பிரச்னை சம்பந்தமாக பிரதமர் வரைக்கும் மனு அளித்தும் எந்த வேலையும் நடக்கவில்லை. இதனால், எங்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. தயவுசெய்து எங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ராஜேந்திரனிடம் பேசினோம். ``எங்களுடைய சொந்த இடத்துக்கு மேல் செல்லும் மின்சாரக் கம்பிகளைத் தான் வேறு வழியாக கொண்டு செல்ல வேண்டுமென நான் கேட்டிருந்தேன். இது சம்பந்தமாக நான் கடந்த ஒன்றரை வருடங்களாக அலைந்தும், மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை வீடு கட்ட வேண்டும் என்பதற்காக, இருந்த பழைய வீட்டையும் இடித்துவிட்டு இன்றைக்கு மிகவும் சிரமத்தோடு குடும்பம் நடத்தி வருகிறேன். பாத்ரூம் வசதி இல்லாமல், என்னுடைய 2 பெண் பிள்ளைகளும் இரவு நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் குறைந்த பின்னர் தான் குளிக்கிறார்கள். எங்களுடைய சிரமத்தை பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும், நடவடிக்கை இல்லை. மாற்று வழியில் கம்பம் அமைத்து, மின்சாரக் கம்பிகளை எடுத்துச் செல்ல பாதை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என் வீட்டின் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கிறார்கள். அதனை அதிகாரிகள் விசாரித்து, அவ்வழியே மின்சாரக் கம்பிகளை எடுத்துச் செல்ல யோசிக்கின்றனர். இந்தப் பிரச்னை சம்பந்தமாக மனு கொடுத்து என்னுடைய உடம்பில் சக்தியே போய்விட்டது. இனிமேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையில்லை. எனவேதான் எங்களை குடும்பத்தோடு கருணைக் கொலை செய்து விடுங்கள்” என கடைசியாக ஒரு மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறேன் என கண்ணீரோடு கூறினார். Trending Articles

Sponsored