``காசா... கத்தியா... கார்டா...''- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி  Sponsoredசென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

சென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும் பகுதியில் டீக்கடை நடத்திவரும் நபர், ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். புகாருடன் அவர், சிசிடிவி கேமரா பதிவு காட்சியையும் கொடுத்தார். அந்த வீடியோவில் டீக்கடைக்காரரை கத்தியைக் காட்டி ஒருவர் மிரட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன. 

Sponsored


அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் இதோ

Sponsored


``கடந்த 17-ம் தேதி இரவு 11 மணியளவில் டிப்டாப் ஆசாமியும் அவரின் நண்பரும் கடைக்கு வருகின்றனர். கூல்ட்ரிங்ஸ் குடித்த அவர்கள், சிகரெட் வாங்கியுள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் செல்கின்றனர். உடனே கடைக்காரர் அவர்களிடம் பணம் கேட்கிறார். இதனால் கூல்ட்ரிங்ஸ் குடித்த ஒருவர், பணம் கொடுக்க கல்லாப்பெட்டி அருகே வந்து அங்குள்ளவரிடம் எவ்வளவு என்று கேட்கிறார். ஆனால், பணத்தைக் கொடுக்காமல் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கத்தி ஒன்றை எடுக்கிறார். அதை அதிர்ச்சியுடன் டீக்கடைக்காரர் பார்க்கிறார். டீக்கடைக்காரரை கல்லாப் பெட்டியிலிருந்து வெளியில் வரும்படி கத்தியைக் காட்டியபடி டிப்டாப் ஆசாமி சொல்கிறார். அதன்படி அவரும் வெளியில் வருகிறார். 
 
பிறகு கத்தியைக் கடைக்காரரிடம் பிடித்துக் கொள்ளுமாறு சொல்கிறார் டிப்டாப் ஆசாமி. ஆனால், அவர் கத்தியைக் வாங்கவில்லை. இதனால், கத்தியைக் கல்லாப்பெட்டி அருகில் உள்ள  மேஜையில் வைத்த அந்த டிப்டாப் ஆசாமி, பர்ஸிலிருந்து ஏடிஎம் கார்டை எடுத்துக் கொடுக்கிறார். அதற்கு ஸ்வைப் மிஷின் இல்லை, பணமாகக் கொடுங்கள் என்று சொல்கிறார் கடைக்காரர். இதையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவதோடு வீடியோ முடிவடைகிறது''. 

இந்தச் சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டீக்கடையில் கூல்ட்ரிங்ஸ், சிகரெட் ஆகியவற்றுக்கு 110 ரூபாய் பில் வந்துள்ளது. ஆனால், அதை அந்த டிப்டாப் ஆசாமியும் அவருடன் வந்தவரும் கொடுக்கவில்லை. பில் கொடுக்காமல் போதையில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். மிரட்டிய நபர், அவருடன் வந்தவர் யார் என்று விசாரித்துவருகிறோம். வீடியோவில் மிரட்டியவரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் விரைவில் அவரைக் கண்டுபிடித்துவிடுவோம்" என்றனர். 

இந்தச் சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored