ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல்.. காத்திருக்கும் பூகம்பம்!Sponsoredநெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்ததில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மனுமீது, பூர்வாங்க (அ) முதல்கட்ட விசாரணை நடத்தப்படுவதாக, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு தொடர்பாகப் பதில் அளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ``ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி பாளையம் ஆகிய நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு 713.34 கோடி ரூபாயாக உள்ள நிலையிலும் அந்தத் திட்டத்துக்கான நிதியை 1,515 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் ஆகிய நான்கு வழிச் சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்டு கோ' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. `பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் சேகர் ரெட்டி, நாகராஜன், பி.சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு, ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் `எஸ்.பி.கே அன்ட் கோ' நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத் துறைச் சாலைகள், கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களுக்கான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்டு கோ'-வுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

Sponsored


மேற்கண்ட சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மகனின் மாமனார் பி.சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன், செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்டு கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அண்டு கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதன்மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைக் கொடுத்ததன் மூலமும் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே, முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார். ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுமார் 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடவேண்டும்" என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``மனுதாரர் அளித்த புகார் மீது ஜூன் 22-ம் தேதி முதல் ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Sponsored


அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ``புகார் அளித்ததிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மனுதாரர் எந்தத் தகவலும் அளிக்கவில்லை... இன்னும் எந்த ஓர் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை ஆரம்பகட்ட விசாரணை என்பது, புகார் விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து மட்டுமே ஆராய்வதற்காக நடத்தப்படுகிறது. இந்த விசாரணையை, புகார் அளித்த 7 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி இரண்டு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி பார்த்தால், ஆகஸ்ட் 22 -ம் தேதியுடன் ஆரம்பகட்ட விசாரணைக்கான காலம் முடிந்துவிட்டது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது வரை ஆரம்பகட்ட விசாரணையை முடிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தச் சாலை  திட்டத்தை உலக வங்கி கண்காணித்து வருகிறது. இதில் தவறு உள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது" என்றார். அப்போது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ``ஆரம்பகட்ட விசாரணைக்கான உங்களின் கால அளவு முடிந்துவிட்டது... இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே" எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ``மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, செப்டம்பர் 4 -ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பு விவகாரமும் காத்திருப்பில் இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் ஊழல் என்கிற விவகாரத்துக்கு அடுத்த மாதம் கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பரில் பூகம்பம் வெடிக்குமா என்பது, 4-ம் தேதிக்குப் பின்னரே தெரியவரும்!Trending Articles

Sponsored