அரசாணை 540 பற்றி அதிகாரிகளுக்கே தெரியவில்லை! நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஆர்வலர்கள் வேதனைSponsoredதேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக, இன்று காலை நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியது. அதேபோல, வைகை அணையும் முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. இதையடுத்து, தேனி மாவட்டத்தின் பிரதானக் கால்வாய்களான பி.டி.ஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் 18ம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தேனி மாவட்டத்தின் பல்வேறு கண்மாய், ஏரி, குளங்களுக்குத் தண்ணீர் சென்றுள்ளது. மானாவரி விவசாயம் இந்த வருடம் கை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இன்று மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும் இந்தச் சூழலில், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்று பேசினர்.

Sponsored


இதுதொடர்பாக சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருபவருமான போடி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்."நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு கொண்டுவந்ததுதான் 540 அரசாணை. இந்த 540 அரசாணை எப்படி உருவானது என்று பார்த்தால், வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் பணியை சரியாகச் செய்யாமல், உருவாகும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றாமல் இருப்பதால், மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியின் வெளிப்பாடும், நீதிமன்றத்தின் கண்டிப்பும்தான் 540 அரசாணை உருவாகக் காரணம். அதிக அதிகாரங்களைக்கொண்ட இந்த அரசாணையை வைத்து, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றலாம். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு, தேனி மாவட்டத்தில் 540 அரசாணையை வைத்து எத்தனை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளீர்கள் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தேன். அதற்கு, இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அப்படி ஒரு அரசாணை இருப்பதும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலருக்குத் தெரியாது என்பதே கசப்பான உண்மை. வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் மத்தியில், ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி, நீர்நிலைகள் பாதுகாப்புகுறித்த மாவட்டக் கலெக்டர் ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி செய்திருக்கிறாரா இந்த கலெக்டர். இதைச் செய்திருந்தாலே முக்கால்வாசி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கலாம். மழை அதிகரித்து இன்று நமக்கு அதிக தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதை முழுமையாகத் தேக்கிவைக்க முடியாத அளவுக்கு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது"என்றார் ஆதங்கத்தோடு.

Sponsored
Trending Articles

Sponsored