சிறுகச்சிறுக சேமித்த 5,600 ரூபாய்... 300 பிஸ்கட் பாக்கெட்... கேரளாவுக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்கள்Sponsoredபெரும் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி பல வகையில் உதவி வருகிறார்கள் தமிழக மக்கள். மருத்துவத்துக்காகச் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றைக் கேரளாவுக்கு கொடுத்து உதவிய நெகிழ்ச்சி சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூரில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள்  சேமித்து வைத்திருந்த பணத்தை ஒன்றாகத் திரட்டி 5,600 ரூபாய் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிஸ்கட் பாக்கெட் விகடன் மூலமாகக் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மேம்பாலத்தில் உள்ளது பார்வை குறையுடையோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளி. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 150 பேர் வரை படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சுரேஷ் என்பவர் நம்மை தொடர்புகொண்டு கேரளாவின் மழையால் ஏற்பட்ட பெரும் துயரத்தைத் தொலைக்காட்சி செய்தியில் கேட்டும், செய்தித்தாள்களில் படித்தும் மிகவும் வருத்தப்பட்டார்கள் எங்க பள்ளி மாணவர்கள். அதிலிருந்து அவர்கள் சரியாக சாப்பிடக்கூட இல்லை. சராசரி மனிதர்கள்போல் அவர்கள் இருக்க மாட்டார்கள். எந்தச் சம்பவங்களாக இருந்தாலும் அவர்களை ரொம்பவே பாதித்து விடும். அதேபோல் இந்தச் சம்பவமும் அவர்களைப் பாதித்ததோடு அதற்கு உதவவும் நினைத்தார்கள். என்னிடம் வந்த மாணவர்கள், `சார் நாங்க சேர்த்து வைத்திருக்கிற பணத்தைச் திரட்டி கேரளாவின் பாதிப்புக்கு உதவ நினைக்கிறோம். செய்யலாமா' என்றனர். அதோடு விகடன் மூலமாகச் செய்தால் அது உரியவர்களுக்குப் போய்ச் சேரும் என்றும் கூறி என்னை நெகிழ்ச்சிப்படுத்தினார்கள். செய்யலாமா சார் என சுரேஷ் நம்மிடம் கேட்டார். உடனே நிச்சயமாகச் செய்யலாம் எனக் கூறியதோடு பள்ளிக்குச் சென்றோம்.

Sponsored


Sponsored


12-ம் வகுப்பு படிக்கும் பரமசிவம் என்ற மாணவரிடம் பேசினோம். ``கேரளாவுக்கு உதவ நினைத்ததுமே எங்கள் மாணவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினோம். எல்லோரும் ஆர்வமாக முன்வந்து அவர்களின் தேவைக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்தார்கள். அமுதபாரதி என்ற மாணவியின் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த 500 ரூபாயை கொடுத்தார். இதேபோல் அவர்களின் பெற்றோர்கள் வந்து பார்த்துவிட்டு செல்லும்போது செலவுக்காக கொடுத்துச் சென்ற பணத்தைச் சேமித்து வைத்திருந்து கொடுத்தனர். மொத்தம் 5,600 ரூபாய் சேர்ந்தது. மேலும், மாணவர்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த 300-க்கும் அதிகமான  பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுத்தனர். எங்களால முடிஞ்ச அளவு திரட்டி இந்த சிறு தொகையைக் கொடுத்திருக்கிறோம். இதைக் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கு சேர்த்து விடுங்கள் சார்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அமுதபாரதியிடம் பேசினோம். ``எனக்குச் சொந்த ஊர் கறம்பக்குடி. என் அம்மா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்பா விவசாய கூலி  வேலை பார்க்கிறார். பல ஆண்டுகளாக அம்மாவுக்கு சிகிச்சை கொடுத்து வருகிறோம். முதலில் தனியார் மருத்துவமனையில் காண்பித்தோம். அதற்குப் போதிய பணம் இல்லாததால் இப்போது நாட்டு மருந்து கொடுத்து சிகிச்சை  அளித்து  வருகிறோம். அப்பா என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் கைச்செலவுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் எனக் கொடுத்து விட்டுச்  செல்வார். அதைச் சேர்த்து வைத்திருந்து நான் ஊருக்குப் போகும்போது அம்மாவுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வாங்கிச் செல்வேன். எனக்கான கஷ்டம் வாழ்க்கையில் பழகிப் போயிடிச்சி. இயற்கை ஆடிய கோர தாண்டவத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர் கேரள மக்கள். அவர்களுக்கும் என்னால் முடிந்த இந்த 500 ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். சார் முடிந்தால் இந்தப் பணத்தை என்னைப்போல் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துங்க. நன்றாக இருக்கும் மனிதர்களே அங்கு படாதபாடுபட்டிருப்பார்கள். கண் பார்வையற்றவர்களின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும். அதோட வலியை எங்களைப்போல் ஆட்களால்தான் புரிந்து கொள்ள முடியும். என் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா நான் இந்தமுறை எதுவும் வாங்கிட்டு வர மாட்டேன். அந்தப் பணத்தைச் கேரளாவின் உதவிக்குக் கொடுத்துவிட்டேன் என்றேன். அம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டார்'' என்றார்.

பின்னர் அந்த மாணவர்களே நம்மிடம் 5,600 ரூபாய் பணம், 300-க்கும் அதிகமான பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்ததோடு இவை விகடன் மூலமாக உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில் மகிழ்ச்சியே என்றும் தெரிவித்தனர். இலகிய மனம் படைத்த இந்த மாணவர்களுக்கு இறைவன் இப்படி ஒரு பெரும் குறையைக் கொடுத்தாலும்  நல்ல செயல்களால் அவர்கள் உயர்ந்து நிற்பதை நினைத்து அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.                                     
                      Trending Articles

Sponsored