செயற்கை Vs இயற்கை விவசாயம்! - 'உனக்கும் எனக்கும்' படம் போல அமைச்சர் நடத்திய போட்டியின் முடிவுSponsoredரவலாக இன்று இயற்கை உணவு, பாரம்பர்ய விஷயங்கள் என்று தமிழ்கூறும் நல்லுலகம் பழைமையை விரும்புபவர்களாக மாறத் தொடங்கி இருக்கிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்ய இன்னும் பல ஆயிரம் விவசாயிகள் மத்தியில் தயக்கம் இருக்கவே செய்கிறது. 'லாபம் கிடைக்காது' என்றும்,'முன்னேர் எவ்வழியோ பின்னேரும் அவ்வழி' என்றும், உடலுக்கு உபாதை தரும் செயற்கை விவசாயத்தை விடாமல் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அரசு அவர்களை நம்பிக்கையூட்டி இயற்கை விவசாயத்திற்கு மடைமாற்றிவிடாததுதாம். இந்நிலையில், தனது மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி அவர்களை இயற்கை விவசாயத்திற்குத் திருப்ப தானே இயற்கை விவசாயியாக மாறி நல்ல அறுவடை காட்டி விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார் அமைச்சர் ஒருவர். இதற்குப் பின்புலமாக இருந்தது இளைஞர்கள் என்பதும், அந்த இளைஞர்களில் அநேகம் பேர் தமிழக இளைஞர்கள் என்பதும்தான் இதில் ஆச்சர்யம்.

 

புதுச்சேரி அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன்தான் அப்படி இயற்கை விவசாயியாக மாறியவர். அவரை மட்டுமல்ல, பாண்டிச்சேரியில் உள்ள அநேக விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றியவர்கள் 'டாஸ்மாக்' என்ற ஓர் அமைப்பை நடத்தி வரும் தமிழக இளைஞர்கள்தாம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்ற முப்பது வயது இளைஞர்தான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வார் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் வெளிநாட்டில் லட்சங்கள் கொடுத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்பும் லட்சிய வேள்வியைச் செய்கிறார்.

Sponsored


 

Sponsored


இன்று இளைஞர்களும் விவசாயிகளில் பலரும் நம்மாழ்வார் கருத்துகளை உலகம் முழுக்க கழனிகளில் விதைத்து வருகிறார்கள். அந்த வகையில்தான், கணேசமூர்த்தி உள்ளிட்ட பல இளைஞர்கள் சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த 'டாஸ்மாக்' அமைப்பை ஆரம்பித்தார்கள். அதாவது, விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றி, அவர்களிடமிருந்து நேரடியாகத் தானியங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக்கி விற்பனை செய்கிறார்கள். இந்த இளைஞர்கள் கடந்த வருடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, 'பாண்டிச்சேரி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப உதவுங்கள்' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், 'நீங்கள் முதல்தடவை எனக்கு நம்பிக்கை தரும் வகையில் விளைச்சல் காட்டினால், மொத்த பாண்டிச்சேரியையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். சேலியமேடு உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை 100 ஏக்கர்களில் கிச்சடிச்சம்பாவை இயற்கை முறையில் விளைவிக்க வைத்தார்கள் இந்த இளைஞர்கள். நாராயணசாமியை வைத்து, விவசாயிகளை அழைத்து, 'அறுவடை திருவிழா' என்று பிரமாண்ட விழாவாக நடத்தி, அதை அறுவடை செய்தார்கள். நம்பிக்கை தரும்விதமாக விளைச்சல் இருக்க, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

மேற்கொண்டு நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் பேசிய 'டாஸ்மாக்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி,

"அடுத்து காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்குத் திருப்ப நினைத்தோம். முதல்ல அவங்க தயங்கினாங்க. உடனே, அந்த மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், 'உங்க தயக்கம் நியாயமானதுதான். ஆனா நான் எனது நிலத்தில் எட்டு ஏக்கரில் பூங்கார் என்ற பாரம்பர்ய ரகத்தைப் போட்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்றேன். உங்களுக்கு நம்பிக்கை தர்ற வகையில் விளைச்சல் இருந்துச்சுன்னா, நீங்களும் இயற்கை விவசாயத்திற்கு மாறனும். டீல் ஓகேவா?'ன்னு கேட்டார். விவசாயிகள் அதற்கு 'சரி' என்றார்கள். அதன்படி, அவருக்கு மொத்தம் இருக்கும் 30 ஏக்கர் நிலத்தில் எட்டு ஏக்கரில் மட்டும் பூங்கார் ரகத்தைப் போட்டு குறுவைப் பயிரை இயற்கை முறையில் வெள்ளாமை பண்ணினோம். மீதி இருக்கும் 22 ஏக்கர் நிலத்தில் அவர் ஏ.எஸ்.டி 16 ரகத்தைப் போட்டு,செயற்கை முறையில் விவசாயம் செய்தார். நாலு நாளைக்கு முன்னாடி இரண்டையும் அறுவடை பண்ணினார் அமைச்சர். பாரம்பர்ய ரகமான பூங்கார் ஏக்கருக்கு 25 மூட்டைகள் வீதம் விளைச்சல் கண்டிருக்கு. ஆனால்,செயற்கை விவசாயத்தில் போட்ட ஏ.எஸ்.டி 16 ரகம் ஏக்கருக்கு 17 மூட்டைகள் மட்டுமே கிடைச்சுச்சு. 'நானே ஆரம்பத்துல பயந்தேன். எங்கே விளைச்சல் கம்மியாயிருமோன்னு. இதுபோதும். மொத்த பாண்டிச்சேரியையும் படிப்படியா நாலைந்து வருடத்திற்குள்ள இயற்கை விவசாயத்திற்கு மாத்திடலாம்'ன்னு மகிழ்ச்சியா சொன்னார் அமைச்சர். 

 

இந்த விழாவை வெற்றி விழாவாக விரைவில் முதல்வர் தலைமையில் பாண்டிச்சேரி மாநிலம் முழுக்க உள்ள அனைத்து விவசாயிகளையும் திரட்டி நடத்தவிருக்கிறோம். தொடர்ந்து, வர்ற சம்பாவுக்கு பாண்டிச்சேரியில் 1000 ஏக்கரில் விவசாயிகளை கிச்சடிச் சம்பா பயிரைப் போட வைத்து, இயற்கை விவசாயம் செய்ய வைக்க அமைச்சரும், அதிகாரிகளும் முடிவு பண்ணினாங்க. முதல்கட்டமாக காரைக்கால் பகுதியில் 600 ஏக்கருக்கான  கிச்சடிச் சம்பா விதைகளை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம். பாண்டிச்சேரி முதல்வர் இப்படி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை திருப்ப ஆர்வம் காட்டுறார். தமிழக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றோம். முடியலை. அதனால், நாங்களே ஊர் ஊரா போய் பேசி, நம்மாழ்வார் அய்யா கருத்துகளைப் பரவலாக்கி, நம்பிக்கை ஏற்படுத்தி, 1500 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிரை இயற்கை முறையில் விவசாயம் செய்ய வைக்க விவசாயிகளை சம்மதிக்க வச்சுருக்கோம். பாண்டிச்சேரியைவிடத் தமிழகத்தில் நிலங்கள் அதிகம். செயற்கை விவசாயம் செய்பவர்களும் அதிகம். நோய்களும் அதிகம். அரசு உதவினால் எல்லா விவசாயிகளையும் நோய் ஏற்படுத்தாத உணவு தானியங்களை விளைவிக்கும் இயற்கை விவசாயத்திற்கு திருப்புவோம்" என்றார்.Trending Articles

Sponsored