ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி!ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 136 பேருக்கு, அவர்களின் தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

Sponsored


வங்காள விரிகுடா கடலில் உருவான ஒகி புயல் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளைத் தாக்கியது. இதில், பலத்த சேதம் ஏற்பட்டது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் தவித்தனர். மேலும், கனமழையால் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. அதேபோல், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. 

Sponsored


இந்தநிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 136 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னைத் தலைமைச் செயலகத்தில் மீனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்குப் பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வின்போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

Sponsored
Trending Articles

Sponsored