வெள்ளத்தால் தவித்த 350 குடும்பம்... கிராமத்தினரை நெகிழவைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்Sponsoredவெள்ளத்தால் தவித்த மக்களின் தாகத்தை ரஜினி மக்கள் மன்றத்தினர் தணித்துள்ளனர். ``ரஜினி மக்கள் மன்றத்துப் புள்ளைங்க தவித்த வாய்க்கு தண்ணீர்த் தந்திருக்கிறார்கள். தற்போதுள்ள நிலையில் இதுதான் எங்களுக்குப் பெரிய உதவி''  என்று கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் கரையோரம் உள்ள கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  குடிசை வீடுகள், உடைமைகள், சாகுபடி செய்த பயிர்கள் என அனைத்தையும் இழந்த அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை.  இந்த நிலையில், நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கியதோடு, டேங்கர் லாரி மூலம் குடிநீரும் வழங்கினார்கள். 

Sponsored


பரந்து விரிந்த கொள்ளிடம் ஆற்றினுள் முதலைமேடுதிட்டு என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.  கொள்ளிடத்தில் கரைபுரண்டு வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் நிலைகுலைந்தனர்.  மாடி வீட்டில் வசிப்பவர்கள் வீட்டினுள் இருந்த பொருள்களை மாடிக்குக் கொண்டு சென்று பாதுகாத்துவிட்டனர். குடிசைகள் மூழ்கியதால் சுவர்கள் இடிந்தன, உடைமைகள் அழிந்தன. இந்த நிலையிலும், ஊரைவிட்டு வெளியேற மறுத்த அவர்களிடம் அதிகாரிகள், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை எடுத்துரைத்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு ஆச்சாள்புரம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். 10 நாள்களுக்குப்பிறகு தற்போது வெள்ளநீர் வடிந்ததால் சொந்த ஊருக்கு மக்கள் திரும்பினர்.

Sponsored


கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் கருணை உள்ளம் படைத்தவர்கள் கண்களுக்குச் சொந்த மண்ணில் அகதிகளாய் நிற்கும் முதலைமேடுதிட்டு மக்களைத் தெரியவில்லை.  இந்த நிலையில், இன்று முதலைமேடுதிட்டு, பாம்பாளையம்மன் கோயிலில் திரண்டிருந்த மக்களுக்கு நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ரஜினி பாஸ்கர் தலைமையில் மன்ற நிர்வாகிகள் வேட்டி, சேலை, போர்வை, பிஸ்கட் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள். 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கர் லாரி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் கொண்டு வந்து தந்தனர்.  ஆண்களும், பெண்களும் போட்டிப்போட்டு குடங்களில் தண்ணீரைக் கொண்டு சென்றனர். 

இதுபற்றி அக்கிராமத்தினரிடம் பேசியபோது, ``எங்களுக்கு வாழ்வாதாரமே முல்லை, மல்லி, காக்கரட்டான் பூ போன்ற மலர்ச் செடிகள்தான். இவற்றின் மூலம் மாதத்துக்கு ரூ.10,000-க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. தற்போது வந்த திடீர் வெள்ளத்தால் மலர்ச் செடிகள் மூழ்கி அனைத்தும் அழிந்துவிட்டது. இதற்கு அரசு ஏதேனும் நிவாரண உதவி வழங்கினால்தான் நாங்கள் மீண்டும் தலையெடுக்க முடியும். அத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் இருந்த குடிநீருக்கான மின்மோட்டார் நீரில் மூழ்கி பழுதாகிவிட்டது. அதனால் வெள்ளம் வடிந்து ஊருக்குள் வந்தும் எங்களுக்குக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்துப் புள்ளைங்க தவித்த வாய்க்கு தண்ணீர்த் தந்திருக்கிறார்கள். தற்போதுள்ள நிலையில், இதுதான் எங்களுக்குப் பெரிய உதவி. இந்த உதவியை மறக்கமாட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.Trending Articles

Sponsored