"கலெக்டர் ஆகணும்னு ஆசைண்ணே!" - நெகிழ வைக்கும் கரூர் அட்சயா!Sponsoredகேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, பலதரப்பட்ட மக்களும் அந்த மாநிலத்துக்குத் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளைச் செய்துவருகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய இதய அறுவைசிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வழங்கியிருந்தார், கரூரைச் சேர்ந்த சிறுமி அட்சயா. இதையடுத்து, அந்தச் சிறுமியின் இதய அறுவைசிகிச்சையை இலவசமாகச் செய்துகொடுக்க சில மருத்துவமனைகள் முன்வந்துள்ளன. இதனால், அந்தக் குடும்பம் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறது

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி - ஜோதிமணி தம்பதியின் மகள் அட்சயா. ஏழாம் வகுப்பு படித்துவரும் அட்சயாவின் தந்தை சுப்பிரமணி, சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில், பிறவியிலிருந்தே இதயப் பிரச்னையோடு இருந்த அட்சயாவுக்கு வைத்தியம் பார்க்க வழியில்லாமல் விக்கித்து நின்றார், தாய் ஜோதிமணி. இதையறிந்த, `இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாதிக் அலி, அட்சயாவின் நிலையைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதன்மூலம் நல் உள்ளங்கள் செய்த பண உதவியைக்கொண்டு கடந்த வருடம் சென்னை அப்போலோவில் அட்சயாவுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு மூன்றரை லட்சம் ரூபாய்வரை செலவானது. 

Sponsored


இந்த நிலையில், ``மறுபடியும், வரும் நவம்பர் மாதம் அட்சயாவுக்கு மேஜர் ஆபரேஷன் ஒன்று செய்ய வேண்டும். இல்லையென்றால், அவளை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகும்' என்று மருத்துவர்கள் அப்போதே கூறியுள்ளனர். இதையடுத்து சாதிக் அலி, சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கினார். அந்த வகையில், ஒரே வாரத்தில் 20,000 ரூபாய் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில், கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட, அதைப் பார்த்த அட்சயாவுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இதையடுத்து, தன்னுடைய இதய அறுவைசிகிச்சைக்காக வைத்திருந்த 20,000 ரூபாயில், 5,000 ரூபாயைக் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் வழங்கினார், அட்சயா.

Sponsored


இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், ``அறுவைசிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒருபகுதியைக் கேரள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி' என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கடந்த 19-ம் தேதி செய்தியொன்றை வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியைப் படித்த தமிழகத்தில் உள்ள இரண்டு பிரபலமான மருத்துவமனைகள், அட்சயாவுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை

செய்துமுடிக்க விருப்பம் தெரிவித்தன. இதற்கிடையே, அட்சயாவைப் பற்றிய செய்தியை, விகடன் இணையதளத்தில் படித்து உருகிய முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், அட்சயா வீட்டுக்குச் சென்று... அவரது தாயைச் சந்தித்து, ``இப்படி ஒரு சிறுமியைத் தாங்கள் பெற்றெடுத்ததற்குக் காலத்துக்கும் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற சிறுமிகள்தாம் வருங்கால நம்பிக்கை தூண்கள்" என்று சொல்லி, அவர்கள் இருவரையும் பாராட்டினார். மேலும் அவர், ``என் தாத்தா பெயரில் உள்ள அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் நிதி உதவியோடு, அட்சயாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையிலேயே முழுச் செலவையும் செய்து அறுவைசிகிச்சை செய்கிறேன். அட்சயாவை 100 சதவிகிதம் நலமாக்கும்வரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக, அட்சயாவின் சகோதரராகக் கூடவே இருப்பேன்'' என்றவர்,  25,000 ரூபாயையும் அட்சயாவுக்கு வழங்கினார். 

இதற்கிடையே அட்சயாவின் செய்தியறிந்து இன்னும் சில பிரபலமான மருத்துவமனைகள், ``அட்சயாவுக்கு நாங்கள் இலவசமாக உயர்தரத்தில் அறுவைசிகிச்சை செய்கிறோம். உடனே, அவருடைய மருத்துவ ரிப்போர்ட்டை அனுப்பவும்'' என்று அழைப்பு விடுத்து வருகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், லண்டனில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையே இதுபோன்ற ஓர் அழைப்பைக் கொடுத்திருப்பதுதான். அதுபோல் பெங்களூருவில் உள்ள சத்தியநாராயணா மருத்துவமனையிலிருந்தும், ஆந்திரா புட்டபர்த்தி மருத்துவமனையிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. இதுதவிர மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட  நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

அட்சயாவுக்கு உதவி செய்துவரும் இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலியிடம் பேசினோம். ``விகடனில் முதன்முதலாக இந்தச் செய்தி வெளிவந்ததையடுத்து, உலகம் முழுவதும் கவனம்பெற்றது. அதன்விளைவாக, அட்சயாவுக்கு இலவசமாக ஆபரேஷன் செய்வதற்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தவிர, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையும் உதவ முன்வந்திருக்கிறது. இதுதவிர, கரூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று, `அட்சயாவைப் பரிசோதித்த பிறகு, அவருக்கு அரசு செலவிலேயே அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது. அட்சயாவுக்கு உதவி செய்த, உதவி செய்ய முன்வரும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்தச் செய்தியை உலக அளவுக்குக் கொண்டுசென்ற விகடனுக்கும், மற்ற ஊடகத்தினருக்கும் என்றென்றும் நன்றி" என்றார், மகிழ்ச்சியுடன்.

பாதிக்கப்பட்ட சிறுமி அட்சயாவிடம் பேசினோம். ``கேரளாவின் மழை வெள்ளப் பாதிப்பை டி.வி-யில் பார்த்தபோது, என் மனம் கவலைகொண்டது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், அந்த மாநிலத்துக்கு நிவாரண நிதியாக என்னுடைய இரண்டாவது அறுவைசிகிச்சைக்காக வந்த பணத்தில் ரூ. 20,000-த்தில், 5,000 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். அதற்குக் காரணம், சமூக வலைதளங்கள் வழியாக என்னுடைய நிலையை அறிந்த பலரும் எனக்கு உதவி செய்தனர். அவர்கள் கொடுத்த பணத்தில்தான், நான் இன்று உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதுபோல்தான், நானும் கேரளாவுக்கு உதவ முன்வந்தேன். எனக்கு உதவியவர்களுக்கு என்றென்றும் நன்றி. கலெக்டர் ஆவதுதான் என் லட்சியம். அப்போதுதான், இதுபோன்ற உதவிகளை இன்னும் நிறைய செய்ய வேண்டும்'' என்றார், நம்பிக்கையுடன்.

அட்சயாவின் ஆசை நிறைவேற வாழ்த்துவோம்...Trending Articles

Sponsored