பாலியல் வன்கொடுமை விழிப்புஉணர்வு: சிறுமி வர்ஷினி யோகாவில் உலக சாதனை!



பாலியல் வன்கொடுமைத் தடுப்பை வலியுறுத்தும் வகையில், விழிப்பு உணர்வுப் பிரசாரமாக `யோகா' மூலம் போலீஸ் அதிகாரியின் மகள் உலக சாதனை படைத்துள்ளார். சென்னைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பி.காஞ்சனா. அவரின் கணவர், ஆர்.கோவிந்தராஜ் சொந்தத் தொழில் செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகள், ஜி.கே.வர்ஷினி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.யோகாசனத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள வர்ஷினி, தான் கற்றுக்கொண்ட யோகாவின் மூலம் பாலியல் வன்கொடுமையைத் தடுப்பது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த விரும்பினார். யோகாவில் புதிய சாதனை படைப்பதுடன், அதை பாலியல் தடுப்புக்கான விழிப்பு உணர்வாக வெளிப்படுத்த விரும்பினார். தன் விருப்பத்தைப் பெற்றோரிடம் வர்ஷினி தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் லிம்கா உலக சாதனை புத்தக நிறுவனத்திடம் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இந்த யோகா சாதனை தொடர்பாக ஆய்வு மற்றும் ஒத்திகைப்பணிகள் கடந்த 10 நாள்களாக நடைபெற்றன. பின்னர், சென்னைத் திருவொற்றியூரில் உள்ள மண்டபம் ஒன்றில், யோகா மூலமான விழிப்பு உணர்வுப் பிரசார சாதனையைத் தொடங்கினார் மாணவி வர்ஷினி. 

Sponsored


ஒன்றன் மீது ஒன்றாக மூன்று அடுக்குகளாக வைக்கப்பட்ட பலகைகளில் தலா நான்கு டம்ளர்கள், நான்கு மூலைகளில் வைக்கப்பட்டன. தரைப்பகுதியில் அதேபோல் நான்கு டம்ளர்கள் என மொத்தம் 16 டம்ளர்கள் அடுக்கி வைக்கப்பட்டன. மாணவி வர்ஷினியை சக மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி ஊக்குவிக்க, அந்தப் பலகையின் மீது வர்ஷினி ஏறி அமர்ந்தார். தரையில் வைக்கப்பட்டிருந்த நான்கு டம்ளர்கள் மீது பலகையை வைத்து, ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதன் மீது ஐந்து நிமிடங்கள் அமர்ந்து யோகா செய்ததுதான் இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. ஆனால், வர்ஷினியைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான டம்ளர்களில் அமர்ந்ததுடன், ஐந்து நிமிட நேரம் என்பதையும் கடந்து, யோகாவில் இருந்தார். இதுவே புதிய உலக சாதனையாகக் கருதப்பட்டது. என்றாலும் விடாமல் மாணவி வர்ஷினி, 15 நிமிடங்களைக் கடந்து, டம்ளர்கள் மேல் வைக்கப்பட்ட பலகையில் அமர்ந்து யோகா செய்ததன் மூலம் புதிய உலக சாதனையைப் படைத்தார். 20 நிமிடங்களைக் கடந்தும், வர்ஷினியின் உடலில் நடுக்கமோ, தளர்வோ இல்லாமல் தியான நிலையிலான யோகா தொடர்ந்தது. இதையடுத்து, போட்டியை ஏற்பாடு செய்தவர்கள், வர்ஷினியின் உலக சாதனையைப் பாராட்டினார்கள்.

Sponsored


மொத்தம் 23 நிமிடம்வரை வர்ஷினி யோகா நிலையில் இருந்தபடி அந்தப் புதிய சாதனையைச் செய்து முடித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ``அண்மைக்காலமாகப் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அத்தகைய கொடூரத்துக்கு எதிராக நம்மால் முடிந்தளவு குரல்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே மாணவி வர்ஷினியின் இந்த முயற்சி என்று நினைக்கிறோம். அதற்காகவே இப்படி ஒரு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். நான்கு டம்ளர்களை வைத்து, அதன்மீது அமர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை யோகா செய்ததுதான், இதற்கு முன்னர் வரையில் உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து நாங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக மாணவி வர்ஷினி யோகா நிகழ்த்திக் காட்டி புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்" என்றனர்.

Sponsored


சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைக் கண்டிக்கும் வகையிலும், அதுபற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடந்த யோகா நிகழ்ச்சி ஓர் உலக சாதனையாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. பள்ளி மாணவர்கள் மூலம் இப்படிக் கொண்டு செல்லப்படும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள், விரைவில் மக்களைச் சென்றடைவதோடு, அதன் நோக்கமும் வெற்றி பெறுகிறது என்றே சொல்லலாம்.



Trending Articles

Sponsored