`ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்துவதா?' - அமைச்சரைக் கண்டிக்கும் ஜவாஹிருல்லா!Sponsored'மது விற்பனை வருமானம் மூலமே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுவதைக் கண்டிக்கிறோம்' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்   ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த  ஜவாஹிருல்லா,"நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் இந்தியாவின் பன்முகப் பண்பாடுகளை அங்கீகரித்து உருவாக்கப்பட்டது. பல்வேறு மத மொழி கலாசார பண்பாடுகளை கவனத்தில்கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நமது அரசமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. நீட்  தேர்வுகளும் முஸ்லிம்களை  அச்சுறுத்தும் வகையில் மாட்டிறைச்சி பெயரால் நடத்தப்படும் சம்பவங்களும், நமது நாட்டின் ஜனநாயகத்துக்கு மதச்சார்பின்மைக்கும், சமூக நலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இந்தியா ஒரு மதச்சார்பற்ற சமதர்ம, ஜனநாயகக் குடியரசு என்பதைப் புறந்தள்ளி, நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்.
 
மக்களை விழித்துக்கொள்ளச் செய்திட, மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டி,  வரும் அக்டோபர் 7-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், தி.மு.க, கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்குறித்து ஆய்வுசெய்ய, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக் குழு அமைத்திருக்கும் சூழலில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்துவந்த  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுதின், வேறு துறைக்கு மாற்றப்பட்டது சரியான நடவடிக்கை இல்லை.
 
குறைந்தபட்சம் தேசிய தீர்ப்பாயத்தின் விசாரணை முடியும்வரை அவரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகத் தொடர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தற்போது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின்  தேர்வை மனதார வரவேற்கிறேன். அவருக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டில் மது விற்பனையில் கிடைக்கும் வருமானம் மூலமே ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறியிருப்பது ஆசிரியர் இனத்துக்கு  விரோதமான கருத்து; இது கண்டிக்கத்தக்கது.  தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் நிலவிவருகிறது. பல்வேறு சாக்குப்போக்குகளைத் தெரிவித்து, தமிழக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவது ஜனநாயக விரோத செயலாகும். எனவே, உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
 

Sponsored
Trending Articles

Sponsored