காவிரிப் பாலத்தின் ஓட்டை அடைப்பு... பெரும் விபத்து தடுக்கப்பட்டது!Sponsoredகடந்த சில தினங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், ஆற்றுப் பால நடைமேடை சீரமைப்பு மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எடை தாங்காமல் நடைமேடை சிலாப் உடைந்ததால் ஆற்றில் விழுந்தார். பாலத்தின் தூணுக்கு அருகே ஆகாயத் தாமரைச் செடிகளைப் பிடித்துக்கொண்டதால் தண்ணீர் அடித்துச் செல்லப்படுவதில் இருந்து தப்பினார். அவரை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி மீட்பது குறித்தும், திருச்சி கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்த லலிதாவும் அவரது மகள் மோனிகாவும் சமயபுரத்துக்குப் பாதயாத்திரையாகச்  செல்லும்போது, திருச்சி-சென்னை சாலையில் பழைய காவிரிப் பாலத்தில் செல்லும்போது தவறிவிழுந்ததில், லலிதா உயிரிழந்தது குறித்தும் அவருடன் விழுந்த மோனிகா பலத்த காயத்துடன் மீட்கப்பட்டதையும் விகடன் இணையதளத்தில் பதிவுசெய்திருந்தோம்.
 
 
தற்போது, காவிரியில் அதிக அளவிலான தண்ணீர் வரத்து உள்ளதால், திருச்சிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குவிகின்றனர். இதனால், காவிரியாற்றுப் பாலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், திருச்சி சமூக ஆர்வலர்கள்,  திருச்சி, காவிரிப் பாலத்தில் தண்ணீரை வேடிக்கைபார்க்கச் செல்பவர்கள், குழந்தைகளைப் பாலத்தின் கட்டைச் சுவர் அருகில் நிறுத்தவோ, நடத்திச்செல்லவோ செய்யாதீர்கள். குழந்தைகளின்  பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுரை கூறுகின்றனர். குறிப்பாக, பழைய பாலங்களில் நடைபாதை அதிக அளவில் பாதிக்கப்பட்டு பலமில்லாமல் இருப்பதால் ஆபத்து என்றும், திருச்சி புதிய காவிரிப் பாலத்தில் இரண்டாவது கட்டை அருகே  பெரிய ஓட்டை உள்ளது. அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை அப்படியே கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
 
 
கட்டுரை வெளியானதை அடுத்து, திருச்சி சமூக ஆர்வலர்கள், விகடன் வாசகர்கள் எனப் பலரும் திருச்சி மாநகர நிர்வாகத்துக்கு இந்த விவகாரம் தொடர்பாகத் தகவல் கொடுத்தார்கள். படங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதையடுத்து, விகடன் கட்டுரை வெளியான சில மணி நேரத்துக்குள், நம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த திருச்சி புதிய காவிரிப் பாலத்தில் இரண்டாவது கட்டை அருகே இருந்த பெரிய ஓட்டை, இரும்புக் கம்பிகள் வைத்து சிமென்ட் பூச்சு செய்யப்பட்டது. 
 
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில், "காவிரிப் பாலத்தில் கைப்பிடிச் சுவர் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக்  குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசு ஒதுக்கிய லட்சக்கணக்கான பணத்தை பொய்க் கணக்கு காட்டி எடுப்பதில் குறியாக இருந்தார்கள். விளைவு, பாலத்தில் சில மாதங்களிலேயே  ஓட்டை விழுந்தது. இதைப் பார்த்துப் பதறிய பலரும்  கடந்து சென்றார்களே தவிர, அதைச் சரிசெய்ய நினைக்கவில்லை. திருச்சி ரஜினி  ரசிகர்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதைச் சரிசெய்ய முயன்றார்கள். அவர்களின் உணர்வை விகடன் கட்டுரை உணர்த்தியதால், தற்போது காவிரிப் பாலத்தில் இருந்த ஓட்டை அடைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
 
 

Sponsored
Trending Articles

Sponsored