அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்கள்... கொள்ளிடம் அணை சீரமைப்பில் நடந்த போராட்டம்Sponsoredகொள்ளிடம் அணைக்குச் செல்லும்போது படகு பழுதாகி நின்றுவிட்டதால் இரண்டு பணியாளர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.
 
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ம் தேதி இரவு 8 மணியளவில், அதிக வெள்ளம் காரணமாக 9 மதகுகள் உடைந்தன.  இந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சகிதமாக நேரில் பார்வையிட்டனர். அப்போது பேசிய முதல்வர், ``உடைந்த கொள்ளிடம் அணைக்குப் பதிலாக ரூ.410 கோடி செலவில் புதிய அணை கட்டப்படும். உடைந்த கொள்ளிடம் அணை தற்காலிகமாகச் சீரமைக்கப்படும்'' என அறிவித்தார். இதையடுத்து உடைந்த கொள்ளிடம் அணையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து உடைந்த 9 மதகுகளின் பகுதியை அடைத்திட 2½ லட்சம் மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் கொள்ளிடம் மேலணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதாகவும் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவுபகலாக பணியாற்றுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமன்றி மீதமுள்ள 36 மதகுகளின் நிலை குறித்தும், அணையின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக, தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட `ஹைடெக்’ சிவில் இன்ஜினீயர்ஸ் ஏஜென்சியின் ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள, ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளைச் சேகரிக்கும் அனுபவம் உள்ள பாலு, சிவா மற்றும் சந்தனக்குமார் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு, கொள்ளிடம் அணையின் தண்ணீருக்கு அடியில் சென்று மற்ற மதகுகளின் நிலை குறித்து, தண்ணீரில் மூழ்கி அணையின் மதகுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் கொள்ளிடம் அணையில் உள்ள மீதமுள்ள மதகுகளில் மேலும் சில மதகுகளில் விரிசல் உள்ளதும், அணையின் அடித்தள பிளாட்பாரம் விரிசல் அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள், அவற்றைச் சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதேபோல்,பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேரில் வந்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி, `முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாகப் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெறவிருக்கிறது. பொதுப்பணித் துறை மூலம் 260 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவிகித சீரமைப்புப் பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாள்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்குப் பாதிப்பு ஏற்படாது’ என்றார்.

இந்த நிலையில், உடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணியில், ஏழாம் நாளான இன்று பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் 800 பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் அதிகாரி ஒருவரை, அணை உடைந்த பகுதியிலிருந்து, தண்ணீர் தேங்கி உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, அவர்கள் சென்ற படகின் மோட்டார் திடீரெனப் பழுதடைந்ததால் நின்றுவிட்டது. தண்ணீர் அதிகமாக வெளியேறும் பகுதியில் படகு நின்று விட்டதால் அந்த ரப்பர் படகு, கட்டுப்பாட்டை மீறி தண்ணீரில் அடித்துச் சென்றது. அடுத்து அந்தப் படகில் இருந்த கனகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய தீயணைப்புத் துறையினர் உடனடியாகக் குதித்தனர். அவர்கள், தண்ணீரில் நீந்தி மிகவும் சிரமப்பட்டு வெளியேறி 9-வது தூணில் பாதுகாப்பாக நின்றிருந்தனர். தண்ணீரின் வேகம் சற்று குறைவாக இருந்ததால் பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Sponsored


இந்த நிலையில், படகு தண்ணீரில் அடித்துச் சென்று, அணை உடைந்த பகுதியில் உள்ள ஆழமான பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் சீரமைப்புப் பணியில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே இந்தப் பணிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், `இன்னும் நான்கு நாள்களில் தற்காலிகமாகச் சீரமைக்கும் பணியானது நிறைவடையும்' என்றார்.

Sponsored


 
 Trending Articles

Sponsored