`காவிரி பாலத்தின் அஸ்திவாரமே ஆட்டம் காணுது'- கலெக்டரிடம் மனு கொடுத்த இளைஞர்கள்



Sponsored



``ஏற்கெனவே முக்கொம்பு தடுப்பணை, இரும்புப் பாலம் எல்லாம் உடையுது. இந்தச் சூழலில், மணல் கொள்ளை அதிகமா நடந்த குளித்தலை டு முசிறி வரை காவிரியில் உள்ள பாலத்தின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. ஆனால், இந்தப் பாலத்தில் இரண்டு மாவட்ட எல்லைப் பிரச்னையால் கால்வாசி பாலத்தில் மட்டும் மின்விளக்கு எரியுது. இரவு நேரத்தில் இந்தப் பாலத்தில் பயணிப்பவர்களுக்கு இதனால் அச்சம் நிலவுகிறது" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் குளித்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறி வரை காவிரியாற்றில் தந்தைப் பெரியார் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில்தான் கரூர், திருச்சி மாவட்டங்களின் எல்லைப் பிரச்னையால் பாலத்தின் கால்வாசி தூரம் மட்டும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக குளித்தலை இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய இளைஞர்கள், ``குளித்தலை டு முசிறி வரை உள்ள தந்தைப் பெரியார் பாலத்தில் மொத்தம் 54 மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் குளித்தலை நகராட்சி 12 மின்விளக்குகளை அமைத்து, மீதியுள்ள பாலத்தில் இருக்கும் பகுதிகளை கும்மிருட்டில் விட்டுள்ளது. மின்விளக்குகள் இல்லாத பாலத்துக்கு முசிறி பேரூராட்சியைத் தொடர்புகொள்ளச் சொல்கிறார்கள். இரவு 11 மணிமுதல் அதிகாலை நாலரை மணி வரை பேருந்து வசதி இல்லை. இதனால், பாலத்தில் இருட்டில் மக்கள் அச்சத்துடன் பயணம் செய்கிறார்கள். விபத்து மற்றும் வழிப்பறி ஏற்படும் அபாயம் உள்ளது. முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தபோது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் 'குளித்தலை நகராட்சியே அனைத்து மின்விளக்குகளையும் பராமரிக்க வேண்டும்' என்று பதில் கொடுத்தார்.

அதை குளித்தலை நகராட்சி ஆணையரிடம் சொன்னோம். ஆனால், அவரோ, 'எங்களுக்கு 12 மின்கம்பங்களுக்கு மட்டுமே மின்விளக்குகள் அமைக்க முடியும்'ன்னு கறாராக சொல்லிவிட்டார். அதோடு, மின்விளக்குகள் அமைக்க நாங்க மனு கொடுத்த மறுவாரமே பாலத்தின் எல்லைப்பகுதியில் உள்ள குளித்தலை நகராட்சியின் எல்லைப் பலகையை உடைத்து எடுத்துப் போய், பாலத்தின் நடுவில் கட்டி வைத்துள்ளார்கள். இந்தப் பாலத்தில் சுங்கவரி வசூல் செய்தபோது குளித்தலை நகராட்சிக்குப் பலகோடிகள் வருமானம் கிடைத்தது. இப்போது சுங்கவரி இல்லாததால், முழு பாலத்துக்கும் மின் விளக்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் மறுக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள் ஏற்படுகிறது. அதனால், மாவட்ட ஆட்சியரிடம், 'பாரம்பர்யமாக இருந்த இந்த எல்லைப் பலகையை உடைத்து நடுப்பாலத்தில் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழையபடி பாலத்தின் ஆரம்பத்தில் எல்லைப் பலகையை வைக்கவும், முழுப் பாலத்துக்கும் மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்ன்னு மனு கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை இல்லைன்னா, போராட்டம் நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக!

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored