சங்கடஹர சதுர்த்தி... விருதுநகர் ஆதிவழிவிடும் விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீக்கும்!Sponsoredமாதம்தோறும் விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை தரிசித்து வழிபட்டால், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம். மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தி, 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால், ஒரு வருடம் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாளை மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நம் வாழ்க்கை வளம் பெற வழிகாட்டும் விநாயகப் பெருமானை தரிசிக்கலாம்!

Sponsored


பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணுக்கு, இறைவனே தாயின் வடிவில் வந்து பிரசவம் பார்த்து அருளியதால், தாயுமானவ சுவாமி என்று திருப்பெயர் கொண்டு திருச்சியில் கோயில் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். ஆனால், அதேபோல் அடர்ந்த காட்டு வழியில் வந்துகொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு இறைவன் அருள்புரிந்த அற்புதம் நிகழ்ந்த தலம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்.

Sponsored


முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியின் வழியாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவநேசி என்ற பெண் தன் தாய் வீடான குன்றையூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். வழியில் பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டவள் சிவபரம்பொருளை தியானித்து வேண்டிக்கொண்டாள். தனது பக்தையின் துயரம் கண்டு இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தப் பெண்ணுடைய தாயின் வடிவத்தில் வந்து பிரசவம் பார்த்தார். பின்னர் அந்தப் பெண்ணின் தாகம் தணிக்க தம் கால் கட்டை விரலால் நிலத்தில் கீறி, ஒரு நதியை உருவாக்கினார். அந்த நீரைப் பருகி தாகம் தணித்துக்கொண்ட சிவநேசி, தாயின் வடிவத்தில் வந்தது மாயூரநாதரே என்பதை உணர்ந்து வணங்கியபோது, மாயூரநாத சுவாமி தையல்நாயகி அம்பாளுடன் தரிசனம் தந்தார். ராஜபாளையத்தில் அமைந்திருக்கும் மாயூரநாத சுவாமி கோயிலின் உபக் கோயில்தான் அருள்மிகு ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயில்.

ராஜபாளையம் நகரில் முதன்முதலில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் ஆதிவழிவிடும் விநாயகர் கோயில். பிற்காலப் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பின்னர் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆன்மிக அன்பர்களால் பழைமை மாறாமல் கோயில் புதுப்பிக்கப்பட்டு, 2015-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்தக் காலத்தில் காடாக இருந்த இந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களுக்கு வழிகாட்டி விநாயகராகவும் வழித்துணை விநாயகராகவும் அருள்புரிந்ததாலும், ஆதிகாலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதாலும் இவருக்கு ஆதிவழிவிடும் விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. செல்லும் காரியம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த விநாயகருக்கு சூறைத் தேங்காய் உடைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

கோயில் முகப்பில் பதினாறு கால் மண்டபம் அமைந்திருக்கிறது. கோயில் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார் ஆதிவழிவிடும் விநாயகர். அவருக்கு அருகிலேயே ஆதி சொக்கநாதர் மற்றும் அம்பிகை காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் ஸித்தி, புத்தி சமேதராக ஜெயஞான கணபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவருடைய சந்நிதியில்தான் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. 

ராஜபாளையத்தில் திருமணத்துக்குப் பெண் எடுத்தாலும் பெண் கொடுத்தாலும் இந்தக் கோயிலில் இருந்துதான் வரிசைத் தட்டுகளை எடுத்துச் செல்வது வழக்கம். திருமணம் தடைப்படும் ஆண், பெண் யாராக இருந்தாலும், விரலி மஞ்சளை மஞ்சள் நூலில் கட்டி, ஆதிவழிவிடும் விநாயகர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு, விரைவில் திருமணம் நடைபெற சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் கயிற்றை ஆண் வலது கையிலும், பெண் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெற்றுவிடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும்,கோயிலுக்கு வந்து ஆதிவழிவிடும் விநாயகருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி, மோதகம் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். 

விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு 26 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிள்ளையார்பட்டியைப் போலவே இந்தக் கோயிலிலும் தினமும் காலையில் கணபதி ஹோமம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் - மதுரை சாலையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

அஷ்ட வரத ஆஞ்சநேயர்

இந்தக் கோயிலின் பிராகாரத்தில் அஷ்டவரத ஆஞ்சநேயரும் நின்ற கோலத்தில் எதிரிலிருக்கும் மலையைப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் 31 வகையான அபிஷேகங்கள் நடைபெறுவதுடன், சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. 

இவருக்கு செவ்வாழைப்பழத்தை நீளவாக்கில் வெட்டி, அதில் பஞ்சுத் திரி போட்டு நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் கடன் பிரச்னைகள் தீருவதாகவும், பெரிய நெல்லிக்காயை இரண்டாகப் பிளந்து அதில் சிறிய திரி போட்டு நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றினால் காரியத்தடைகள் விலகுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.Trending Articles

Sponsored