கொள்ளையர்கள் நடத்திய வெறிச்செயல்... இறந்துகிடந்த தாயுடன் இரவு முழுவதும் உறங்கிய குழந்தை!



நகைக்காக தாய் கொலைசெய்யப்பட்டது தெரியாமல், இரவு முழுக்க ஒரு குழந்தை அவரோடு விளையாடிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. சிங்கப்பூரில் வேலை செய்துவரும் இவருக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவருக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வாழ்க்கையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பிறகு பணிக்காக சிங்கப்பூரில் தங்கியுள்ள நேரு, அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி லாவண்யாவையும் மகனையும் பார்த்துச்செல்வது வழக்கம். கணவரின் சொந்த ஊரில் தனியாக இருப்பதால், பாதுகாப்பு கருதி  லாவண்யா, தனது தாய் வீட்டில் இருந்தார். அவ்வப்போது, கணவரின் ஊரிலும் இருப்பதுண்டு.

இந்த நிலையில், உறவினர் ஒருவரின் இல்ல விசேஷத்துக்காகத் தனது கணவரின் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு குழந்தையுடன் வந்த லாவண்யா, அவரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீடு, வயல் பகுதியில் இருப்பதால், தனியாக வசித்துவந்த லாவண்யா,  முன்வாசலை பெரும்பாலும் பூட்டிவைத்திருப்பார்.  நேற்று காலை, நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை. மேலும், வீட்டின் அருகில் உள்ள வயல் பகுதியில் லாவண்யாவின் மகன் அழுதுகொண்டிருந்தான். அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லாவண்யா ரத்த வெள்ளத்தில் சலடமாகக் கிடந்தார். 
 
வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் கலைந்தநிலையில் கிடந்தன. நகைகள் இருந்த டப்பாக்கள்  சிதறிக்கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருமயம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் மார்சல் வரவழைக்கப்பட்டது. லாவண்யாவின் உடலை மோப்பம் பிடித்த பின், வீட்டில் இருந்து வெளியே வந்து,  வேப்பம்பட்டி முக்கம் வரை சென்று திரும்பிவந்தது. இதைத் தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், லாவண்யா  நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும், கொல்லப்படுவதற்கு முன்பு, லாவண்யா தனது குழந்தையுடன் சாப்பிடுவதற்கு தட்டில் சாதம் எடுத்து வைத்துள்ளார். குழந்தை சாப்பிடாமல் உணவு அப்படியே இருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், லாவண்யாவை தாக்கிவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம். இந்தத் தாக்குதலில், லாவண்யாவுக்கு தலையிலும், நெஞ்சிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  லாவண்யாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாவண்யாவைக் கொலைசெய்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

தாய் கொல்லப்பட்டது தெரியாமல், இரவு முழுவதும் ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யாவின் அருகில் குழந்தை படுத்துக்கிடந்துள்ளது. பசியில் உணவுக்காகத் தாயை அழைத்துக் கதறியது, அப்பகுதி மக்களை உறையவைத்துள்ளது.
 
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்பு, நகை திருட்டுச் சம்பவங்கள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Sponsored




Trending Articles

Sponsored