25 நிமிடங்கள் சலபாஷானா... யோகாவில் சென்னை மாணவி கின்னஸ் சாதனை!Sponsoredயோகா கலையில் உச்சமாகக்  கருதப்படும் சலபாஷானா  ஆசனத்தில், தமிழகத்துப் பெண் ஒருவர் கின்னஸ் சாதனை நிகழ்த்தி ஆச்சர்யப்படவைத்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர், குருவர்ஷினி (15). இவரது அப்பா பெயர் சாந்தராமன். இவர், சிறு வயதிலிருந்தே யோகாவில் மிகவும் ஆர்வம் உடையவர். 7 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். யோகாவில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இப்பெண்ணுக்கு வந்தது.  அதற்காக இவர் தேர்ந்தெடுத்தது, சலபாஷனா என்னும் யோக நிலை. கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், இந்த யோகா கலையை முறையாகக்  கற்றுக்கொள்ள தனக்கென ஒரு பயிற்சியாளர் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அதற்காக திருப்பூரிலிருந்து  ராமு என்னும் யோகா பயிற்சியாளரை இவருடைய பெற்றோர் வரவழைத்தனர். ஆரம்பத்தில், ஆறு நிமிடங்கள் மட்டுமே சலபாஷனா நிலையில் குருவர்ஷினியால் இருக்க முடிந்தது. தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்ய ஆரம்பித்தார். நாள்கள் செல்லச் செல்ல யோக நிலையில் இருக்கும் நேரம் அதிகரித்தது. கூடவே தன்னம்பிக்கையும் சேர்ந்து வளர்ந்தது.

குருவர்ஷினியின் ஒரே குறிக்கோள் கின்னஸ் சாதனை மட்டுமே. இதற்குமுன் சலபாஷானா என்னும் யோகா நிலையில் பல்கேரியாவைச் சேர்ந்த தான்யா செக்கோவா சிசோவா என்பவர் 21 நிமிடங்கள் 26 நொடிகளுக்கு நிலையாகத்  தொடர்ந்து இருந்ததே சாதனை. அந்தச்  சாதனையை முறியடிக்க,  யோகா குரு ராமு மேலும் சில சிறப்பு பயிற்சியை குருவர்ஷினிக்குக்  கொடுத்துள்ளார். இதனால், பன்னிரண்டு நிமிடம் வரை நிலையாக இருக்கும் அளவுக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு விடாமல் பயிற்சி எடுத்துவந்தார். இதைத் தொடர்ந்து, பல்லாவரத்திலுள்ள சாய்பாலா என்னும் மண்டபத்தில், உலகசாதனை நிகழ்த்த முடிவுசெய்யப்பட்டது.

Sponsored


Sponsored


கட்டைவிரலால் 26 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஹேமச்சந்திரன் தலைமையில் குருவர்ஷினியின் கின்னஸ் சாதனை முயற்சி நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு குருவர்ஷினி சலபாஷானா என்னும் நிலையில் இருக்கத் தொடங்கினர். பல்கேரியப் பெண்ணின் சாதனை நிமிடங்களை 21-வது நிமிடத்தில் கடந்தபோது, அங்கிருந்த அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அரங்கில் இருந்த அனைவரும் அவரைத் தொடர்ந்து  உற்சாகப்படுத்தினர். இதனால், மேலும் 4 நிமிடங்கள் அதே நிலையிலே இருந்து, இறுதியாக 25 நிமிடம் 10 நொடிகளில் நிறுத்திக்கொண்டார். இதன்மூலம், சலபாஷனாவை உலகிலேயே அதிக நேரம் செய்தவராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் குருவர்ஷினி. யோகக் கலையை உலகிற்கு அளித்த பாரத நாட்டுக்கு அந்தக் கலையால் மகுடம் சூட்டியுள்ளார் குருவர்ஷினி.

இது தொடர்பான சான்றிதழ், கின்னஸ் நிறுவனத்திடமிருந்து இவர் கைக்கு வர சில வாரங்கள் ஆகும். Trending Articles

Sponsored