`அன்று ரயில்... இன்று பஸ்'  - பட்டாக்கத்தியால் பதறவைத்த சென்னை மாணவர்கள்Sponsoredசென்னைப் புறநகர் மின்சார ரயிலில் கத்தியோடு அட்டகாசம் செய்த மாணவர்கள்போல, தற்போது பஸ்ஸின் படியில் நின்றபடி கத்தியை ரோட்டில் உரசியபடியே செல்லும் மாணவர்களின் வீடியோ காட்சி, மக்களைப் பதறவைக்கிறது.

சென்னை பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பஸ்ஸில் அவ்வளவாகப் பயணிகள் இல்லை. ஆனால், முகத்தைத் துணியால் மூடியபடி சில கல்லூரி மாணவர்கள், பஸ்ஸின் இரண்டு வாசல்படிகளிலும் தொங்கியபடி பயணித்தனர். கண்டக்டர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் படியிலிருந்து உள்ளே வரவில்லை. அரசு பஸ்ஸில் பயணித்த கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரிக்கு ஜே! என்று கத்தினர். அடுத்து, அந்த மாணவர்கள் செய்த காரியம்தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. முன்வாசல்  படியில் தொங்கிய ஒரு மாணவன், பளபளக்கும் பட்டாக்கத்தியை எடுத்தார். பிறகு, அதை ரோட்டில் உரசியபடியே சென்றார்.  ரோட்டில்  உரசிய பட்டாக்கத்தியிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பின் படியில் நின்ற மாணவர் ஒருவரும் தன்னிடமிருந்த பட்டாக்கத்தியை ரோட்டில் உரசினார். 

Sponsored


இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், பயணிகள் பீதியடைந்தனர்.  கல்லூரி வந்ததும் அந்த மாணவர்கள் இறங்கினர். பட்டாக் கத்தியுடன் மாணவர்கள் செய்த அட்டகாசத்தை வீடியோ எடுத்தவர்கள், அதை சமூக வலைதளத்தில் பதிவுசெய்தனர். தற்போது, அந்த வீடியோ வைரலாகிவருகிறது. வீடியோ குறித்து தகவல் கிடைத்ததும், சென்னை மாநகர போலீஸார், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் யார் என்று விசாரித்துவருகின்றனர்.  

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் ரயில் நிலையத்துக்கும் நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கும் இடையே மின்சார ரயிலில் பயணித்த மாணவர்கள், பிளாட்பாரத்தில் கத்தியை உரசிப் பதற்றத்தை ஏற்படுத்தினர். அந்தச் சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டது. வீடியோமூலம் பட்டாக்கத்தியோடு பந்தா காட்டிய மாணவர்களைக் கைதுசெய்தோம். தற்போது பஸ்ஸ்ல் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பட்டாக்கத்தியைக் காட்டி பீதியை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள்குறித்த விவரங்களைச் சேகரித்துவிட்டோம். விரைவில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே ரூட் தல பிரச்னை நீண்ட காலமாக இருந்துவருகிறது. ரூட் தல பிரச்னை காரணமாக மாணவர்களிடையே கடும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, ஏற்கெனவே கவுன்சலிங் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால், மோதல் சம்பவங்கள் குறைந்தன. தற்போது வெளியான அரசு பஸ்ஸில் பட்டாக்கத்தியை வைத்து பீதியை ஏற்படுத்திய மாணவர்கள், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள், வீடியோவைப் பதிவுசெய்தவர்கள் என அனைவரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.  வீடியோவில், குறிப்பிட்ட ஒரு கல்லூரியின் பெயரை மாணவர்கள் சொல்கின்றனர். இதனால், போலீஸ் டீம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்திவருகிறது" என்றார். Trending Articles

Sponsored