மந்திரவாதி பாபு பாயைக் கொன்றது ஏன்? - தப்பிக்க பெண் செய்த தந்திர வேலைSponsoredசென்னை திருவல்லிக்கேணியில் கொலை செய்யப்பட்ட மந்திரவாதி பாபு பாயின் வழக்கில் அதிரடி திருப்பமாக பெண் ஒருவர்  சந்தேக வலையில் சிக்கியுள்ளார். போலீஸாரிடமிருந்து தப்பிக்க அவர் செய்த தந்திர வேலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டை முதலாவது தெருவைச் சேர்ந்த சையத் பஸ்ருதீன் என்கிற பாபுபாய் என்பவருக்கு வயது 62. இவர், திருவல்லிக்கேணியில் உள்ள வணிகவளாகத்தில் அறை ஒன்றை எடுத்து, 40 ஆண்டுகளாக ஓதுதல் வேலை செய்துவந்தார். சம்பவத்தன்று பர்தா அணிந்த 10 பெண்கள், தங்களின் பிரச்னைகளை பாபு பாயிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது, பெண்கள் கூட்டத்திலிருந்து மர்மப் பொருள் ஒன்று பாபு பாய் மீது வீசப்பட்டது. இதனால், அவரின் உடலில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய பாபு பாய் பரிதாபமாக இறந்தார். 

Sponsored


இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர், சிப்பாய் செந்தில் தெருவைச் சேர்ந்த மணி என்பவர், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல் அடிப்படையில் 10 பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 9 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். ஆனால், ஒரு பெண் மட்டும் மாயமாகியிருந்தார். அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அந்தப் பெண், ஜாம்பஜாரைச் சேர்ந்த தாஜ் என்று தெரியவந்தது. இதனால், அவரை போலீஸார் தேடினர். அவரின் உறவினர்களிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது நாங்களும் தாஜை தேடிவருவதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். 

Sponsored


இதையடுத்து தாஜின் உறவினர்களைப் போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போதுதான் திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அதாவது தாஜின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் செல்லும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அவர்களைப் பின்தொடர்ந்து போலீஸாரும் அங்கு சென்றனர். அங்கு, தாஜ், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் தாஜ் எப்போது அனுமதிக்கப்பட்டார், அவருடன் வந்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது முக்கிய தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சையத் பஸ்ருதீன் என்கிற பாபுபாய், மந்திரவாதியாகவும் இருந்துள்ளார். பலருக்கு சூன்யம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவரால், தாஜ் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாஜ்தான் பர்தா அணிந்து பாபு பாயை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போதுதான் பாஸ்பரஸ் என்ற பொருளை பாபு பாய் மீது வீசியுள்ளார். அது, அவரின் உடலில் பட்டவுடன் தீப்பிடித்துள்ளது. பாஸ்பரஸ் எப்படி தாஜிக்கு கிடைத்தது என்று விசாரித்துவருகிறோம். 

தாஜை கைது செய்வதில் சில சட்டசிக்கல்கள் உள்ளன. தற்போது அவர், மனநோயாளி மருத்துவமனையில் இருக்கிறார். அவர்தான் மந்திரவாதியைக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால், மனநோயாளியாக அனுமதிக்கப்பட்ட தாஜை கைது செய்வது குறித்து ஆலோசித்துவருகிறோம்" என்றனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாஜிடம் போலீஸார் விசாரித்தபோது, `பாபு பாய் எனக்கு சூன்யம் வைத்துவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் அவரைக் கொலை செய்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். ஆனால், அடுத்த நிமிடமே மாறி மாறி பேசியிருக்கிறார். தாஜின் முரண்பட்ட தகவலால் போலீஸார் குழப்பம் அடைந்துள்ளனர். இருப்பினும் பாபு பாய் கொலை நடந்தபிறகுதான் தாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போலீஸாரின் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. முதலில் தாஜின் உறவினர்களிடம் விசாரித்துவிட்டு அதன்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

 தப்பிக்க இப்படி நாடகமா ?

மந்திரவாதி பாபு பாய் கடந்த 27-ம் தேதி இரவு 8 மணியளவில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  சம்பவ இடத்திலிருந்த 10 பெண்களை பல்வேறு சிரமங்களுக்குப்பிறகு போலீஸார் கண்டுபிடித்தனர். ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் 10வது பெண், தாஜிடம் விசாரிக்க அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லை. வீட்டில் உள்ளவர்களும் தாஜ் குறித்த எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தாஜ், கடந்த 28-ம் தேதிதான் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற தாஜ், பிற்பகலில்தான் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் மனநோயாளி போல நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாஜின் கணவர், ராயப்பேட்டையில் பர்னீச்சர் கடை நடத்திவருகிறார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். Trending Articles

Sponsored